NAM AZHWAR – J K SIVAN

‘நம்”   ஆழ்வார் –   நங்கநல்லூர்  J K  சிவன்
தமிழை வளர்த்தவர்கள் பள்ளிக்கூட,  காலேஜ்,  வாத்தியார்கள்  தமிழ் பண்டிதர்கள் . ப்ரோபஸர்கள், கவிஞர்கள் என்று நினைத்தால் அது சரியாகாது.  தமிழை வளர்த்தவர்கள்  பள்ளிக்கூடம் தோன்றுவதற்கு முன்பே  தோன்றிய பக்திமான்கள், சைவர்களும் வைணவர்களுமாக  அவர்கள் பல பிரிவினர். அதில் வைணவத்தை சேர்ந்த  பன்னிரண்டு பேர்  ஆழ்வார்கள்  என்று அழைக்கப்பட்டவர்கள்.  ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை ஆழ்வார்கள் என்று சொல்வார்கள்.  அந்த பன்னிரு ஆழ்வார்களின்  பாடல்கள் பாசுரங்கள் எனப்படும், பக்தி பூர்வமானவை மட்டுமல்ல தமிழ் கொஞ்சி விளையாடும்  தன்மை கொண்டவை.  பன்னிரு ஆழ்வார்களின்  4000 பாடல்களைக்  கொண்ட  திவ்ய பிரபந்தம் அனைவரும் ஒரு முறையாக படிக்கவேண்டிய  அற்புத நூல்.
எட்டாம்  நூற்றாண்டிலிருந்து  9வது நூற்றாண்டுவரை ஹிந்துமதம்  பிற  மதங்களால் பின் தள்ளப்பட்டிருந்த வேளை , ஆதிசங்கரர் அவதரித்தார்.   பாரத தேசம் முழுதும்  திக்விஜயம் செயது  ஹிந்து சனாதன தர்மத்தை நிலைநிறுத்தி  ஷண்மத ஸ்தாபனம் செய்து  அத்வைதத்தை போதித்தார்.
ஆழ்வார்கள்  தெற்கே தமிழை வளர்த்து  வைஷ்ணவத்தை முன்னிறுத்தி ஹிந்து சனாதன  தர்ம  பக்தியை வளர்த்தார்கள்.   சைவமதத்தை நாயன்மார்கள்  பரப்பினர்.
எனக்குப்  பிடித்த  மிக அற்புத  தமிழ்க்  கவிஞர், வேதாந்தி, விஷ்ணு பக்தர்,   பன்னிரு  ஆழ்வார்களில் ஒருவர்    நம்  ஆழ்வார்.  தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.  வேதங்களை தமிழாக்கிய  வேதம் செய்த  மாறன்.  இவருக்கு  35  பெயர்கள்.  அதில் ரொம்ப  பிரபலமானவை.  காரி மாறன்,  சடகோபன், குருகூர் நம்பி,  குருகைப் பிரான், பராங்குசன், சடாரி, மாறன், வகுளாபரணன், குருகையார் கோன்.
 தாமிரபரணிக்கரையில்  திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரி  என்பவருக்கும், அவர் மனைவி  உடைய நங்கைக்கும்  புத்திரன் நம்மாழ்வார்.   அப்போதெல்லாம் தமிழ் வருஷங்கள் தானே கணக்கு. கலியுகம் பிறந்து 43வது பிரமாதி வருஷம் வைகாசி மாசம், விசாக நக்ஷத்ரம் என்று ஆழ்வாரின் பிறந்தநாளைச் சொல்கிறார்கள்,   பிறந்த வுடன்  அழவில்லை, பால் குடிக்கவில்லை, அசைவு இல்லை.  மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் ”மாறி”  இருந்ததால்  ”மாறன்”.  பதினாறு வருஷம் இப்படி  ஒருவித சலனமும் இல்லாமல் திருக்குருகூர் நம்பி கோவில்  புளிய மரத்தின் அடியில் இருந்தார்.  வடக்கே  க்ஷேத்ராடனம் சென்ற  மதுரகவி  ஆழ்வார்   அயோத்தியில்  இருந்த  போது  வானத்தில் தெற்குத் திசையில் ஒரு  அபூர்வ ஒளியைக் கண்டு  அதைத்தொடர்ந்து  தெற்கே வந்தார். அது நேராக  இந்த  திருக்குருகூர்  புளியமரத்தடியில் கொண்டு விட்டு மறைந்தது.
எழுப்பியும்  விழிக்காத  இந்த 16வயது பாலகனை  எழுப்ப  மதுர கவி  ஒரு கல்லால் அடிக்க, விழி திறந்தது. சடகோபனின் ஞானம் மதுர கவியை கவர்ந்தது. அடிமையானார்.   கண்விழித்த மாறனிடம்  மதுரகவி  கேட்ட முதல் கேள்வி:
”செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”
முதல் முறையாக பேசிய  மாறன் அளித்த பதில்:    “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”.    இதன் உள்ளர்த்தம் ”ப்ரக்ரிதியில் உழலும் ஜீவன், அதிலேயே அனுபவம் பெற்று ஜீவிக்கும். பரத்தில் திளைத்து பரமனிலேயே உய்யும்” என்ற உயர் தத்துவம் இதில் அடங்கும் என்பார்கள். நிதானமாக படித்து   யோசித்து, புரிந்து கொள்ளுங்கள். மதுரகவி ஆழ்வார், இதன் பொருளை உணர்ந்து அந்த கணம் முதல் நம்மாழ்வாரையே தமது குருவாகக் கொண்டார்.  

நம்மாழ்வார்  ஒரு மிகச் சிறந்த ஞானி.  அவதார புருஷர். ஆனால் யாருக்கு தெரியும்? அவர் தான் பிறந்தது முதல் வாய் பேசாமல், பாலோ, ஆகாரமோ, நீரோ அருந்தாமல் மௌனி  யாகவே இருந்தாரே. பிறந்தது முதல் கண்ணே திறக்க வில்லையாம், அழவில்லை யாம்,  இப்படி ஒரு அதிசய,  அபூர்வ குழந்தையாக இருந்தாலும் பெற்றோருக்கு கவலை இருக்காதா? அந்த ஊர் பெருமாள் பொலிந்து நின்ற பிரான் ( ஆதி நாதன்) என்ற பெயர் கொண்டவர். குழந்தை பிறந்த 12ம் நாளே பெருமாள் முன் குழந்தையைக்   கிடத்தி வேண்டினார்கள் பெற்றோர். என்ன ஆச்சர்யம்? குழந்தை கண் திறந்து பார்த்து நேராக தவழ்ந்து அருகே இருந்த புளியமரத்தை அடைந்தது. அங்கே ஒரு பெரிய பொந்தில் அமர்ந்தது. இது ஸ்தல விருக்ஷம். இந்த புளியமர இலைகள் இரவில் கூட மற்ற மரங்கள் இலைகள் போல மூடி உறங்குவதில்லை. ”உறங்காப்புளி” என்ற பிரசித்த பெயர் பெற்றது.
 இந்த புளிய மர பொந்தை, ஆதிசேஷனே பூமியில் அவதரித்து படம் விரித்து நிற்பதாக கூறுவதுண்டு. புளிய மரத்தில் சௌகரிய மாக அமர்ந்த குழந்தை த்யானத்தில் ஆழ்ந்தது. வருஷங்கள் பதினாறு ஓடியது. அதற்கப்  புறம் ஒரு 16 வருஷம் தான் வாழ்ந்தார். மொத்த வயது 32 தான். அதற்குள்ளேயா இத்தனை யுக விஷயங்கள்? ஆதிசங்கரரும் விவேகானந்தரும் கூட இப்படித்தானோ?
இந்த ஆழ்வார் இருந்த காலம் கி.மு. 3102, கலியுகத்துக்கு முன்னாலேயே என்றும், இல்லை, அப்புறம் தான், அதாவது 6, 8, 9ம் நூற்றாண்டு கி.பி. என்கிறார்கள். நாம் எதற்கு வடையை எண்ணச் சொன்னால் துளையை எண்ண வேண்டும். வருஷமா முக்கியம்.?ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படும் குருகூர்  தாமிர பரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூர். திரு நெல்வேலியிலிருந்து 20 கி.மீ. திருச்  செந்தூரிலிருந்து 17 கி.மே. ஸ்ரீ வைகுண்டம் என்று ஒரு ஊர் 3 கி.மி. தூரத்தில் இருக்கிறது. ஆழ்வார் திருநகரி மிகச் சிறந்த ஒரு வைணவ ஸ்தலம். திவ்ய தேசம்.  ரொம்ப  ஆர்வட்த்தோடு, பக்தியோடு, ஆனந்தத்தோடு நம்மாழ்வார்  ஜென்ம ஸ்தலத்தை தரிசித்தது என் அதிர்ஷ்டம்.
திருவண் பரிசாரம் என்று ஒரு திவ்ய தேசம் இருக்கிறதே அதில் தான் உடைய நங்கை ஜென்மஸ்தலம் . அந்த ஊரில் தான் உடையநங்கையின் தந்தை வைஷ்ணவ ஸ்தானிகராக இருந்தவர். அவரைத்தான் காரி மாறனுக்கு மணமுடித்தார்கள். திருவண் பரிசாரம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப் பக்கத்தில் உள்ள ஊர்.
நம்மாழ்வாரை பெருமாளின் படைத் தலைவராம் விஷ்வக்சேனரின் அம்சம் என்பார்கள்.  ‘நம்’ ஆழ்வார் என்பது நாம்  வைத்தது இல்லை.  ஸ்ரீரங்கம்  ஸ்ரீ ரங்க நாதரே இவர் ”நம் ஆழ்வார்” என்று பெருமையாக சொன்னதால் அந்த பேர் உலகம் உள்ளவரை நம்மை மகிழ்விக்கும். அவர் ஞானியாக மட்டும் இல்லை. இணையற்ற கவிஞன். ஆழவார்களிலேயே மிகச் சிறந்த முதன்மையான ஆழ்வார். இவர் புலமையைக் கண்டு   உலகமே  மகிழ்கிறது. தமிழ் மொழிக் கவிகளில் நிகரில்லாத கம்பர் சடகோபரந்தாதி என்று இவரைப் பற்றி எழுதிய பாடல்களில் இவருக்கு ஈடான தமிழ் ஞானம் கொண்ட பக்திக் கவிஞன் கிடையாது என்று அல்லவோ எழுதியிருக்கிறார்.
மதுர கவி என்ற சோழ தேசத்து பிராமணர் ஒருவர் வேதங்களில் நன்றாக தேர்ச்சி பெற்றவர். வானிலே ஒரு ஒளி அவரை வடக்கே இருந்து வழிகாட்டி குருகூர் வரை அழைத்துக் கொண்டு  திருக்குருகூர்  சென்று நம்மாழ்வார் முன் நிறுத்தி மறைந்தது.     எப்படி அந்த மாயவன் எங்கோ இருந்த மதுர கவியாழ்வாரைப்பிடித்து முக்கால் இந்தியாவுக்கு மேல் நடக்க   வைத்து காடு மேடு எல்லாம் கடந்து தெற்கே எங்கோ ஒரு சிறு ஊரான திருகுருகூர் அடைந்து பேசாத நம்மாழ்வாரை பேச வைத்து அவரது பாசுரங்களை படியெடுக்க வைத்தான்!! எல்லாம் நம் மேல் கொண்ட அன்பினால் தானே! நாம் அனுபவிக்கத்தானே!
நம்மாழ்வார் ‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்று அனுபவித்து வாழ்ந்தவர். எதிரே ஒரு கம்பமோ, கன்றுக்குட்டியோ, மரமோ இருந்தாலும் அதை அணைத்து ”என் கண்ணப்பா” என்று விஷ்ணுவாக பாவித்து அனுபவித்தவர். திருநகரியிலிருந்து ஸ்ரீ ரங்கம் நடந்தார். ரங்கநாதனை சேவித்தார். ஸ்ரீ வைஷ்ணவத்திலே ஜொலிக்கும் ஒரு தாரகை நம்மாழ்வார். அந்த மஹா பெரிய வைஷ்ணவ வரிசை, ஸ்ரீதரன் , ஸ்ரீ, விஷ்வக்சேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி,யாமுனாச்சார்யர், பெரியநம்பி, ராமானுஜர்…”   என தொடர்வது.
விஷ்ணு ஆலயங்களில் நாம் தலையில் கிரீடம் மாதிரி பட்டாச்சாரியார் முன் தலை குனிந்து சாற்றிக் கொள்கிறோமே , அதன் மேல் இரு திருவடிகள் தோன்றும். இது தான் சடாரி, நம்மாழ்வார். என  தொடர்வது. ஒவ்வொரு முறை பெருமாளை தரிசிக்கும் போதும் நாம் கேட்காமலேயே நம்மாழவார் நம்மை ஆசீர்வதிக்கிறார்! இது இனி நினைவிலிருந்தால் மனது குளிரும்
நாம் எதை நினைக்கிறோமே அதாகவே ஆகிவிடுகிறோம். இதைத்தான் கிருஷ்ணன் கீதையிலும் நமக்கு நினைவூட்டு கிறான். எல்லா உபநிஷத்க்ளும் வேதங்களும் வெவ்வேறு விதமாக ஒரே உண்மையையே பலவாறாக எடுத்துச் சொல்கின்றன.
நம்மாழ்வார் லேசுப்பட்டவரா எவ்வளவு சொல்லலங்காரத்தோடு இதை சொல்லியிருக்கிறார் தெரியுமா. கேளுங்கோ.
அவரவர் தமதம அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே
புரியலையா”
ஒவ்ருவனும் அவன் மனம் போன போக்கில் அவனுக்குகந்த, தேர்ந்தெடுத்த வகையிலே, இறைவனை நாடுகிறான். மனம் திருப்தி அடைகிறான்.  விப்ரா பஹுதா வதந்தி — அறிந்தவர்கள் அவர்கள் அறிந்ததை அவர்கள் வழியில் சொல்கிறார்களே தவிர சொல்வது ஒன்று தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *