KULASEKARA AAZHWAAR – J K SIVAN

ஒரு  வீர சேர  ஆழ்வார்   –   நங்கநல்லுர் J.K. SIVAN  

சாதாரணமான ஒருவன்  சன்யாசியாகலாம்.  சந்நியாசி  ராஜாவாகலாம்.  ராஜா  சன்யாசியாகலாம்.  ராஜா சகலமும் துறந்து பகவானே உன் திருவடியே  சரணம் என்று ஆவது ரொம்ப  அதிசயம். அப்படி ஒரு  வீரமான  சேர நாட்டு  ராஜா ஆகிவிட்டான்.    ராமன் மேல் அலாதி பிரியம். பக்தி.   திருப்பதி வெங்கடாசலபதி  என்றால்  உயிர். திருமால்  திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஆழ்வானாகிவிட்டான்.  வைணவ திலகங்கள்  பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவனாகவும்  மாறிவிட்ட ராஜா தான் குலசேகர ஆழ்வார். சிறந்த தமிழ் புலமை. அற்புதமான பாசுரங்கள் எழுதியவர்.
ஆழ்வார் பல க்ஷேத்ரங்களுக்கும் ஸ்தலங்களுக்கும் சென்றார். ராமனிடம் தன்னை இழந்தார். அவனுக்கு ”ராகவனே தாலேலோ” என்று தாலாட்டு பாடி உறங்க வைத்தார். தான் உறங்கவில்லை. ”அடே கிருஷ்ணா, நீ கல் நெஞ்சன், அங்கே பார்த்தாயா? உன்னைப் பெற்ற உன் தாய், தேவகி உன் லீலைகளையெல்லாம் காணாமல் கேளாமல் ஏங்குகிறாளே தெரியவில்லையா? அவள் மனக் கிடக்கையை நானே உனக்கு சொல்கிறேன் ” என்று பல பாசுரங்கள் பாடினார். ”தொல்லை இன்பம்” இப்படித்தான் உருவானது. .

ஆழ்வார் மிகவும் இளகிய நெஞ்சர் . திருப்பதிக்குச் சென்றவர் நம்மைப்போல் வரிசையில் டிக்கெட்டோடு நின்று கடியாரத்தைப் பார்த்துக் கொண்டு தரிசனம் எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்  என்று யாரையும்  விசாரிக்கவில்லை.   கோவில்  வாசல் கல் படிகளைப் பார்த்ததுமே ”அடடா இவை எவ்வளவு பாக்கியம் செய்தவை. இதோ இந்தக் குளத்தில் வளையவரும் மீன் எவ்வளவு அதிருஷ்டம் செய்திருக்கிறது. இதோ பாரேன், இந்த செண்பக மரத்தின் கர்வத்தை. கோவில் வாசலில் கம்பீரமாக நின்று நிழல் கொடுக்கிறது பக்தர்களுக்கு. உள்ளேயும் அடிக்கடி எட்டிப்பார்த்து தரிசனம் வேறே பெறுகிறது. .

இந்த பெரும் பாறை மட்டும் லேசானதா? இங்கிருந்து எவரும் இதை அசைக்கக்  கூட முடியாதே. ஜம்மென்று இங்கிருந்தே அதற்கு பெருமாள் தரிசனம் உண்டே.

அந்த வைஷ்ணவரை, பட்டாச்சார்யாரைப்  பாருங்களேன். பெருமாள் எதிரே சதா சர்வ காலமும் தங்க பாத்திரத்தில் பெருமாள் வாய் கொப்புளிக்க நீரோடு, பல் துலக்கி பெருமாள் துப்பும் நீரை அந்த பாத்திரத்தில் தினமும் ஏந்த எந்த ஜன்மத்தில் புண்யம் பண்ணினவரோ.!”

ஒரு ராஜா, மஹா பராக்கிரம வீரன். எப்படி குழந்தையாக பெருமாள் பித்தராக மாறிவிட்டார் கவனித்தீர்களா? ஒன்றுமில்லாத நாம் என்னமாய்த் துள்ளுகிறோம்!! அதனால் தான் அவர் ஆழ்வார். நாம் தாழ்வார்.

குலசேகர ஆழ்வார் 67 வருஷ காலம் பூலோக வாசம் இருந்தார். அவர் மகள் இளையும் அவரோடு சேர்ந்து வைகுண்டம் ஏகி இருவருமே பெருமாள் திருவடிகளை அடைந்தார்கள்

”ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்.
தேனார்ப் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

இந்த திருப்பதியில் குளக்கரையில் ஒரு கொக்காகவோ ஒரு பறவையாகவோ பிறக்காமல் போனேனே? அது சரி  இல்லை. திடீரென்று என் புத்தி ஒருவேளை மாறி, வேறெங்காவது பறந்து போய்விடுவேனே.  இது வேண்டாம்.
பேசாமல் குளத்திலேயே மூழ்கிக்கிடக்கும் ஒரு மீனாகவாவது இந்த திருப்பதி குளத்தில் பிறந்திருக்கலாமே?   ஹுஹும்.  அதுவும் சரியாக இருக்காது என்று தோன்றுகிறதே. ஒரு வேளை கொக்கு போன்ற பறவை மீனைக் கவ்வி விழுங்கி விடுமே. கொக்கு வயிற்றுக்குள் போனபிறகு  அப்புறம் எப்படி குளத்தில் இருக்க முடியும்?

நல்ல யோசனை. இதோ இந்த செண்பக மரமாக   மாறி  நாம்  நிற்பது தான் சாலச் சிறந்தது.  நீண்ட நாள் உயரமாக வளர்ந்து நின்று எவர் தலையும் மறைக்காமல் பெருமாளைப் பார்த்துக்கொண்டே நிற்கலாம். அடியார்களுக்கு நிழலையும் தரலாம். ஆனால் அதிலும் ஒரு சங்கடம் இருக்கிறதே  என்ன பண்ணுவேன?   இந்த பக்தர்கள் சும்மாவே  இருப்பதில்லை.   என்னிடம் வந்து  என்  பூக்களைப் பறித்துக்கொண்டு எங்கோ மலையடிவாரத்துக்கு போய் விட்டால் என்ன செய்வது?.

ஒருக்கால் இப்படி செய்வது உசிதமோ? பேசாமல் ஒரு கூரான முள் மரமாக காட்டில் இங்கேயே ஒரு ஓரத்தில் நிற்பது தான் புத்திசாலித்தனம்.. யாரும் தொந்தரவு பண்ணமாட்டார்கள். கிட்டவே வரமாட்டார்கள்.  சேச்சே   ரொம்ப  சுயநலம்.   அவசரப்பட்டு விட்டேனே.   யோசிக்கவே இல்லையே.  முள் மரமாக இருந்தால் எவராவது வந்து வெட்டி அடுப்பில் போட்டு விடுவார்கள். அப்புறம் எப்படி நான்  இந்த வேங்கடேசனைப் பார்ப்பது.?
நல்ல உபாயம் ஒன்று தோன்றுகிறதே. இந்த ஏழு மலைகளில் ஒன்றின் சிகரமாகவே ஆகிவிட்டால் என்ன? எவனும் அசைக்க மாட்டானே. நாமும் காலம் காலமாக இங்கேயே அசையாமல் நின்று பெருமாளை திவ்யமாக தரிசிக்கலாமோ? இல்லை அது தப்பு. அடடா,  என் எண்ணத்தில் இப்போது எல்லாம் ரொம்ப சுயநலம் கலந்து விட்டதே. பெரிய உயர சிகரமாக இருந்தால் பக்தன் மலை ஏற மாட்டானே. பகவானைக்காட்டிலும் அவனுடைய பக்தன் பாத ஸ்பர்சம் ச்லாக்கியமாச்சே. அது எனக்கு கிடைக்காமல்  போய்விடுமே. தப்பு தப்பு 

இன்னொரு  வழி தோன்றுகிறது. அந்த உயரிய மலைமீதிருந்து ஹா  என்று  வீழும் நீர் வீழ்ச்சியாகவோ, நதியாகவோ, காட்டாறா கவோ  நான்  இருந்தால்?    நல்ல எண்ணம்  தான்.. பக்தர்கள் பாத கமலங்களைத் தொடும் புண்ணியம் அதிகம் கிடைக்கலாமே. இரு இரு.   பொறு என்ன அவசரம்.மறுபடியும்?   இது போகாத ஊருக்கு வழி., சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறேனோ? நீராக மாறினாலும், பக்தர்களுக்கு நீரில் கால் வைக்க எண்ணம் தோன்றினால் தானே என் மேல் பக்தர்கள் காலடி படும்? ஆசை நிறைவேறும்?. கட்டாரில் கால் வைக்க தயங்குவார்களே . ஆழம் தெரியாமல் காலை விடாதே என்று ஒரு பொன்மொழி வேறு இருக்கிறதே.
அடடா   இது  பெஸ்ட். best .  சுலப வழி இது தான். இந்த  திருப்பதி திருமலை வெங்கடேசன் கோவில் இருக்கிறதே அதை மறந்தே போனேனே!! வெங்கடேசன் கோவில் வாசலில் ஒரு பெரிய பாறையாக இருந்து  விடுவோம். என்னை மிதித்துக்கொண்டு தானே எல்லா பக்தர்களும் உள்ளே சென்று பெருமாளைக் காண முடியும். இதுவே சரியான முடிவு. — எப்படி குலசேகர ஆழ்வார் யோசனை?

இவ்வளவு சுவாரசியமான இந்த குலசேகர  ஆழ்வார்  யார்?
குலசேகர ஆழ்வார் 8வது நூற்றாண்டு மலையாள விஷ்ணு பக்தர்.
பிறந்த இடம்: திருவஞ்சிக் களம் .
வேறு பெயர்கள்: கொல்லிக் காவலன். கூடல் நாயகன். கோயிக் கோன், வில்லவர் கோன், சேரலர் கோன் .
வருஷம் /மாதம் பிரபவ வருஷம், மாசி மாதம்.
பிறந்த நக்ஷத்ரம் : புனர் பூசம் – ராமர் நக்ஷத்ரம், அதனால் தான் ராமர் மேல் அளவுகடந்த பாசமும் பக்தியோ? பெருமாளையே ராமனாக பார்க்கிறார்     ”பெருமாள் மொழியில்” ராமர் மேல் அருமையான 105 பாசுரங்கள். ஒரு முறை முடிந்தால் அவற்றை சேர்ந்து அனுபவிப்போம்.
அம்சம் : விஷ்ணுவின் கௌஸ்துபம் (கழுத்தில் ஹாரம்)
தாய் தந்தையர் பெயர் : நாத நாயகி, திட வ்ரதன் (சேரநாட்டு ராஜா ராணி )
ராகவனை த்தூங்க வைக்க ”ராகவனே தாலேலோ” பாடிய அதிசய ஆழ்வார் இவர்.
கிருஷ்ணனை விடுவாரா. பால கிருஷ்ணன் செய்த சேஷ்டிதங்களை, தாங்க முடியாத அளவுக்கு பண்ணின விஷமங்களைப் பொறுத்துக் கொண்டு வளர்த்த யசோதையை நினைவில் கொண்டு இதெல்லாம் பெற்றவளுக்கு கிடைக்க வில்லையே என்ற ஏக்கத்தில் தான் ”தொல்லை இன்பம்” என்ற அபூர்வ பாசுரம் உருவானது. தவற விடாமல் படிக்கவேண்டிய ஒரு காவியம் இது.
பெருமாள் திருமொழியில் வரும் ஒரு பாசுரத்தில் ஆழ்வார் இப்படி விளக்குகிறார்:

கண் பனிசோர, மெய் சிலிர்த்து, அவன் நினைவில் இளைத்து, ஏங்கி, அவனிருக்கும் திக்கெல்லாம் விழுந்து வணங்கி, கும்பிட்டு எழுந்து, ஆடி, பாடி, என் அப்பனே, அரங்கா, என்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சும் அடியார்கள் அவனுக்கே பித்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பித்தர்கள் அல்ல. இப்படி இல்லாத மற்ற ஆசாமிகள் தான் முழுசான பித்தர்கள்.

ராமனைக் குழந்தையாய் தொட்டிலிலிட்டு தாலேலோ பாடுகிறார்.

”மன்னு புகழ் கௌசலைதன் மணி வயிறு வாய்த்தவனே”      பாசுரத்தை நீலாம்பரியில் கேளாத காது இருந்தென்ன பயன் ? அதன் ருசி அறியாத செவியென்ன செவியே? இந்த பாடல் நிறைய தடவை கேட்டிருந்தும் இன்னும் காதில் ஒலிக்கிறது. (என் அண்ணாவின்   குழந்தைகளை தூளியில் தாலாட்டும்போது என் அ ம்மா இந்த பாசுரத்தை நீலாம்பரியில் பாடி கேட்டிருக்கிறேன்)

இந்த குலசேகரர் ஒரு அபூர்வ கலைஞர். கவிஞர். யாருக்கும் தோணாதது அவருக்கு தோன்றும். பிறந்த மறுகணமே முகம் கூட சரியாக பார்க்காமல் தேவகி கண்ணனைப் பிரிந்தாள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து பிறத்தி மகனாய் அவன் கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்தான். அவன் சிறிய கைகளால் பிறர் வீட்டு சட்டிகளில் துழாவி வெண்ணெய் திருடி தின்ற அழகு, அவன் சிறிய தாமரைக் கரங்களையும் அவன் விஷமம் தாங்கமுடியாமல் அவன் இடுப்பில் ஒரு தாம்பு கொண்டு உரலோடு கட்டியதையும், அடி வாங்கியதையும்,

”ஏண்டா கிருஷ்ணா நீ இன்னொரு வீட்டில் வெண்ணை, தயிர் திருடினாயா?” என்று கேட்டபோது
”நானா எனக்கு அவர்கள் வீடு எங்கே என்றே தெரியாதே”    கண் மலர்ந்து முகம் அப்பாவித்தனமாக ஒரு பொய்யை பதிலாக சொன்னாலும் இதழ் ஓரத்தில் தயிர் வெண்ணைத் துளிகள் இருக்கும். வெள்ளையாக  அவை, அந்த குறுகுறுப்பான கரு நிற முகத்தில் இருந்து அவனைக் காட்டிக்கொடுத்த போது யசோதை கோபம் மறந்து அவனழகில் மயங்கி சிரித்து களித்ததும், பொய் அழுகை அவன் அழுது, கண் சிவந்து, வாய் நெளிந்து ‘அது நான் இல்லை ” என்று தலை ஆட்டிய அழகும், அப்படி அவள் கண்டு பிடித்தாலும்   ”இல்லை அம்மா  இனி அவ்வாறெல்லாம் செய்யமாட்டேன்”    என்று போலி வாக்கு கொடுத்து,    வேண்டிய அழகும் —- இதெல்லாம் அந்த தேவகி, அவனைப் பெற்றவள் ”தொல்லை இன்பத்தை”க் காணக் கொடுத்து வைக்க
வில்லையே என்று தானே அவளாக மாறி குமுறுகிறார்.

என்ன பக்தி பவ்யம் இருந்தால் ஸ்ரீரங்கத்தில் அரங்கன் ஆலயத்தில் வைஷ்ணவ அடியார்கள் பதித்த காலடிப் பொடியில் புரண்டு உருண்டு பேரின்பம் பெற ஆசை மனதில் தோன்றும்.

உறையூர் வாழ் அழகிய மணவாள பெருமாள் (அரங்கனின் மற்றொரு பெயர் ) மீது மட்டற்ற காதல். எனக்கு திருவேங்கடத்தில் பிறந்தாலே போதும் அதுவே தான் வைகுண்டம் என்கிறார். திருமலையில் ஆலய வாசலில் ஒரு கல் படியாக இருப்பதில் அவருக்கு உண்டான சந்தோஷத்தை மேலே விளக்கியிருக்கிறேன். அருமையான நிகரற்ற ஒரு திவ்ய பாசுரம் அது. அதனால் தான் இன்றும் பெருமாளின் சந்நிதியின் முன்பு இருப்பது   ”குலசேகர படி”.

சிதம்பரத்தில் கோவிந்தராஜனை ராமனாக பார்த்து கட கடவென்று 11 பாசுரங்களில் ராமாயணத்தை பொழிந்து தள்ளி இருக்கிறார். குலசேகராழ்வார்.
கிருஷ்ணன் மீது முகுந்த மாலை என்கிற சம்ஸ்க்ருத ஸ்லோகம் எழுதிய ஒரே தமிழ் ஆழ்வார் இவர் தான்.
அதில் ஒரு ஸ்லோகம் 33வது இது:

”கிருஷ்ணத்வதீய பாத பங்கஜ பஞ்சராந்தம்
அதயைவ மே விசது மானச ராஜ ஹம்ச:
பிராண பிரயாண சமயே கப, வாத, பித்தை:
கண்டாவரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே ??

krishNa tvadheeya padha pankaja pancharaantham
adhyaiva mE visathu maanasa raaja hamsa:/
praaNa prayaaNa samayE kapa vaadha pitthai:
kaNTavarOdhanavidhou smaraNam kuthasthE?//

”என் கிருஷ்ணா, இதைக் கேள். இந்தக் கணமே, இந்த க்ஷணமே, என் மனம் எனும் அன்னம் உன் திருவடித் தாமரையை நாடட்டும். அப்பறம் அப்பறம் என்று தள்ளிப் போட்டுவிட்டால், என் மரண காலத்தில், என் குரல் கெட்டு , பித்த, வாத,  கபம் நெஞ்சை இறுக்கி, பேச்சு நின்று, மூச்சு திணறும்போது, வாய் குழறி உன்னை எப்படியப்பா அழைப்பேன், நினைப்பேன். எனவே தான் இந்த எமெர்ஜென்சி வேண்டுகோள்.”
இதை உணர்ந்து தான்  ஒரு  கெட்டிக்கார ஆழ்வார்  ”அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா” என்றார்.
பாற்கடலில் பைந் நாகப் பாயின் மேல் பள்ளி கொண்ட ரங்கநாதா, எப்போது உன்னை கண்குளிரக் காண்பேன்?. என்றைக்கு உன் புகழ் என் வாய் மணக்கபாடுவேன்? உன் அடியவர் கூட்டத்தில் என்று நானும் ஒருவனாக சேர்வேன்? கை நிறைய மலர்களை எடுத்து திருப் பாதத்தில் தூவும் நாள் என்றோ? உன் பாதார விந்தத்தில் சிரம் வைத்து பணியும் நாள் என்றோ? என் நெஞ்சு ஒரு பாறை, அதை உருக வைக்கும் சக்தி உன்னிடம் தானே ரங்கா இருக்கிறது. அதை உருக வையேன்? அப்பா ரங்கா, உன்னை கண் குளிர காணும்போது அந்த ஆனந்த பரவசத்தில் கண்கள் குளமாகுமே ,அந்த அனுபவம் எனக்கு வேண்டும்.அதை நீ  கொடுப்பாயா ?’ நான் ஊழ்வினைப்பயனால் உன்னை அணுக ஒண்ணாதவனாகி விட்டேனோ?. என் ஊழ்வினையை அழித்து, அறுத்து உன் அருகில் என்னைச் சேர்ப்பாயா?’    இந்த பூமியில் உன் பாதத்தின் அடியில் புரளும் நாள் எந்நாளோ? உன் அடியார் திருக்கூட்டத்தில் நானும் ஒருவனாக கூடி மகிழும் நாளை விரைவில் தருவாயா?

நான் மேற் சொன்ன ”தொல்லை இன்ப ” பாசுரத்தில் தேவகியின் வார்த்தைகள் இவை  :

”ஹே கிருஷ்ணா . நான் உன்னைப் பெற்றவள். அவ்வளவே. ஆனால் அந்த மற்றவள்? அவளைப்போல் நான் உன்னை அனுபவிக்கக் கொடுத்து வைக்காத ”மலடி” யாகி விட்டேனே.உன்னைக் கையிலேந்தினேனா? மடியில் இட்டேனா? கன்னத்தில் முத்தமிட்டேனா? இரவு பகல் கண் விழித்தேனா? பேருக்கு த்தானே நான் தாய் என்ற பேய் . என்னைப்போல இவ்வளவு துர்பாக்யசாலி உலகில் எங்கேனும் உண்டா? உன்னை இட்டு ஆட்ட ஒரு தொட்டிலுண்டா? ஒரு தாலாட்டு? ஹுஹும். உன் அன்றாட வளர்ச்சியைக் கண்டு களித்தேனா? மழலையில் மயங்கினேனா ? பாலூட்டும் பாக்கியம் கூட இல்லாத ஒரே தாய் நானே. நீ வளர்ந்து செய்த சேஷ்டிதங்களை பிறர் சொல்லிக் கேட்ட ஒரு வேடிக்கைத் தாய் நான். எனக்காக மீண்டும் அவற்றையெல்லாம் ஒரு தடவையாவது செய்து காட்டுவாயா கண்ணா?”    எவ்வளவு அற்புதமான பாசம். கோரிக்கை.

குலசேகர ஆழ்வார் மங்களாசாசனம் பண்ண திவ்ய தேச க்ஷேத்ரங்கள் :
1. திருவரங்கம் 2. திருக்கண்ணபுரம் 3. திருச் சித்ர கூடம் 4. திரு வித்துவக்கோடு 5.திருவேங்கடம். 6.திரு அயோத்யா.7.திருப்பாற்கடல் . முடிந்த போதெல்லாம் திவ்ய தேசங்களை சென்று தரிசிப்போம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *