ARUPATHTHU MOOVAR. CHERAMAN PERUMAL NAYANAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN
சேரமான்  பெருமாள் நாயனார்

எப்படிப்பட்ட  மஹான்கள்  புண்ய புருஷர்கள்  வாழ்ந்த,  இன்னும்  சிலர் இப்போதும்  வாழும்  புண்ய  தேசம்  நமது பாரதம் என்று நாம்  முழுதும் உணராதது நமது துரதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.  தமிழகத்தைப் பொறுத்தவரை,  அதுவும் சைவ சமயத்தை பொறுத்தவரை, சேக்கிழார் பெருமான்  சுந்தரரின்  திருத்தொண்ட தொகையை மூலமாக  வைத்து 63  சிவ பக்தர்கள், நாயன்மார்கள் எனப்படுபவரகளைப் பற்றி  புராணம் எழுதியிருக்கிறார். அதை தான் நாம்  பெரிய புராணம் என்கிறோம். எல்லோரும் ஒரு முறையாவது படிக்கவேண்டிய  அற்புத நூல்.  அந்த அறுபத்து மூவரில் ஒருவரைப் பற்றி இன்று அறிவோம். அவர் பெயர்  சேரமான் பெருமாள் நாயனார்..
சேரமான்  கேரள ராஜா,  மகோதயபுரத்தை ஆண்ட பிற்காலச் சேர அரசர்களில் முதலாவது அல்லது கடைசி அரசனாக இருக்கலாம். இவர்  ஆண்ட காலம் 12 ஆண்டுகள் என்கிறார்கள்.
பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த   பன்னிரு  ஆசிரியர்களில்  ஒருவர்  சேரமான் பெருமாள் நாயனார்.  மற்றவர்கள்  திருவாலவாயுடையார்  (மதுரை ஈசன் சொக்கநாதர்) , காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,  நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகியோர்.
சேர ராஜாக்கள் வம்சத்தில்   திருவஞ்சைக் களத்தில்  பூர்வ ஜென்ம புண்ணிய பலனாய்த் தோன்றியவர் சேரமான் பெருமாள் நாயனார்.  திருவஞ்சைக் களத்து  சிவபெருமானிடம் ரொம்ப பக்தி.   ராஜாவாக  இருந்தாலும்  அவர்  தினமும்  விடிகாலையில் எழுந்து ஆலயத்தைத்  திருஅலகிட்டும், மெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் தொண்டுகள் செய்து இறைவனை வழிபட்டு வந்தார்.   சில  உயிர் வாழும் ஜந்துக்கள் பேசும்  பாஷை அவருக்கு தெரியும்  என்பதால்  கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயர் இவர்க்கு   உண்டு.
ஒரு தடவை  யாரோ ஒரு வண்ணான்  மூட்டையை தூக்கிக்கொண்டு நடந்து வந்தான். மூட்டை நிறைய  துணி துவைக்கும்  உவர்மண் . வெள்ளையாக  இருக்கும்.   மழை திடீர் என்று பெய்து   மூட்டையில் இருந்த வெள்ளை உவர்மண்  கரைந்து உடல் முழுதும் அந்த வண்ணன் மீது படர்ந்து வெயிலில் காய்ந்து உடல்முழுதும்  விபூதி பூசியவர் போல் காட்சியளித்தான்.  இதை கவனித்த சேரமான்  ராஜா பட்டத்து யானை மேலிருந்து கீழே இறங்கி அந்த வண்ணானை  சிவனடியாராக கருதி ஸாஷ்டாங்கமாக  நமஸ்கரித்து உபசாரங்கள் செய்து தனது  பட்டத்து யானை  மேல்  அந்த வண்ணானை  ஏற்றி அமரச்  செய்து தான் நடந்து அரண்மனை சென்றார்.  இது பற்றி நம்பியாண்டார்  பாடியது  திருத்தொண்டர் திருஅந்தாதியில்  வருகிறது:

மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறி நீறார்
தன்னர் பிரான்தமர் போலவருதலும் தான் வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்எனும்
தென்னர் பிரான்கழறிற்றறி வான்எனும் சேரலானே.(44)

ஒவ்வொருநாளும்  சேரமான்  சிதம்பரம் நடராஜனை  மனதில் நினைத்து உபச்சாரம் பூஜைகளை  செய்வார். இதை ஏற்றுக்கொண்டதற்கு  அடையாளமாக  நடராஜா,  பூசையின்  முடிவில்  தனது  பாதத்தின்  சிலம்பொலியை  எழுப்பி  சேரமான் கேட்டு மகிழ வைத்தார் என்று புராணம் சொல்கிறது.   ஒருநாள்  பூசை முடிந்ததும்  வழக்கமாக கேட்கும் நடராஜனின் பாத சிலம்பொலி லேட்டாக  கேட்டது.  என்ன காரணம்?  என் பூசையில் ஏதோ பிழையோ என்று சேரமான்  கலங்கினார். அப்போது நடராஜர்   ”சேரா,  சிதம்பரத்தில்  சுந்தரர்  வந்திருக்கிறார்   என் மீது   பாடல்களை பாடுகிறார். அதைக் கேட்டுக்  கொண்டிருந்ததால் உனக்கு என் பாத சிலம்பொலி லேட்டாக  கேட்டது ”என்கிறார்.
உடனே  சுந்தரரைக் காண  சிதம்பரம் ஓடுகிறார்  சேரமான்.  அங்கிருந்து சுந்தரர்  திருவாரூர் சென்றுவிட்டார் என அறிந்து அங்கே செல்கிறார் சேரமான்.  தரிசிக்கிறார். இருவரும் நெருக்கமான  நண்பர்களாகிறார்கள்.  சேரமான் திருமும்மணிக் கோவை என்னும் பிரபந்தம் பாடி  சிவனைப் போற்றினார். சுந்தரரோடு  சில காலம்  சேர்ந்திருந்து பல சிவாலயங்கள் இருவருமாக சேர்ந்து   சென்றார்கள்.
 பாண்டிநாடு சென்று திருஆலவாய் முதலான தலங்களைத் தரிசிக்க விரும்பி  மதுரை யாத்திரை மேற்கொண்டனர்.   பாண்டிய மன்னனும்  சோழ மன்னனும்  இந்த சேரராஜாவோடு  சேர்ந்து மூவேந்தர்களாக  சுந்தரரை வணங்கி உபசரித்தனர். பாண்டியநாட்டு  சிவஸ்தலங்களுக்கு  சேரமானோடு  சுந்தரர் சென்று  திருவாரூர்  இருவரும் திரும்பினார்கள். சிலகாலம் தங்கி சேரமான் சுந்தரரை அழைப்பை ஏற்று சுந்தரரும்  சேரமான் தலைநகரான   கொடுங்கோளூர் சென்றார்கள்.  சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் பக்தி பரவசமாக  ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ்வித்தார்  சேரமான்.
ஒருநாள் சேரமான் திருமஞ்சனசாலையில் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்தபோது சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று இறைவரை வணங்கி, `தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.   மிகவும் சந்தோஷமுற்ற  பரமேஸ்வரன் இந்திரன் முதலிய தேவ கணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பிச் சுந்தரரைத் கயிலைக்கு அழைத்து சென்றார். .
சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத்  தனது  ஞான திருஷ்டியில் அறிந்த   சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம்  விரைந்து  சென்று சுந்தரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டு  களித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் ‘ஓம்  நமசிவாய; ‘  என்று உச்சரித்து ‘ நீயும்  சுந்தரரின் வெள்ளை  யானையை தொடர்ந்து கைலாசம் ஓடு”  என்று சொல்கிறார்.   குதிரை தலை தெறிக்க ஓடியதால் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே  சேரமான் சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாக   சிவபெருமானின் வாஸஸ்தலமாகிய  கைலாசத்தை அடைந்தார்கள். சுந்தரர்  உள்ளே சென்று   அம்பாளையும் சிவனையும் வணங்கினார்.  கூடவே வந்த  சேரமானைப் பார்த்து சிவபிரான் `இங்கு நாம் அழையாமல்  நீ வந்தது ஏன்?` எனக் கேட்கிறார். ஈசனின்   திருவருள் வெள்ளம் சுந்தரருடன் என்னையும் ஈர்த்து இங்கே  கொணர்ந்து நிறுத்தியது; அடியேன் தேவரீரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலாப் புறம் ஒன்று பாடியுள்ளேன் அதனைத் திருச்செவி சார்த்தியருள் வேண்டுமென வேண்டினார். பெருமான் அதனைச் சொல்லுக எனக்கேட்கத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக் கயிலையில்  சிவ பெருமான்  முன்  அரங்கேற்றினார்.
சிவபிரான்  சுந்தரரோடு சேரமானையும் சிவகணங்களுக்கு தலைவனாக  சேரமானையும்  நியமித்து  கயிலையில் சிவத்தொண்டாற்றினார் என்கிறது புராணம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *