AADI AMAVASYA THARPANAM – J K SIVAN

ஆடி அமாவாசை  –  நங்கநல்லூர்  J K  SIVAN

இந்த  2023  வருஷம்  ஆடிமாசம்  ரெண்டு அமாவாசை. கடைசி அமாவாசை முக்கியமானது. அது இன்று.  ஆடி, 31-ம் திகதி, அதாவது   ஆகஸ்ட்  16ம் தேதி.   நேற்று மத்தியானம்.12.42 மணிக்கு தொடங்கி  இன்று  மத்தியானம்  3.07 வரை அமாவாசை திதி உள்ளது. நமது மூதாதையர்களை போற்றி  தர்ப்பணம்  என்று எள்ளும் நீரும்  மனதில் பக்தியோடு பாசத்தோடு அவர்களுக்கு அர்ப்பணித்து  அவர்களது நித்ய ஆசீர்வாதங்களைப் பெற இன்று தர்ப்பணம் என் தந்தை வழியில், என் அப்பா, என் தாத்தா, கொள்ளு தாத்தா அவர்கள் மனைவிகள், அப்புறம் என் தாய்வழியில் தாத்தா, கொள்ளுத்தாத்தா  வகையறா அவர்களுக்கு  தர்ப்பணம் செய்தேன் .
தெய்வீக சக்திகள் நம் பிரார்த்தனைகளுக்கு  ஆசி அளிக்கும்  ஆடி மாதம் மிகவும் மங்களகரமானது. ஆடி அமாவாசை தர்ப்பணத்தால் அவர்களின் ஆன்மாக்கள் மோக்ஷம் அடைய நாம் உதவுகிறோம். அது நம் கடமை.
அமாவாசை  சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சந்திக்கும் நாள்.   சூரியன் தந்தையையும் ஆன்மாவையும் குறிக்கிறது; அதே சமயம் சந்திரன் தாயையும் மனதையும் குறிக்கிறது. சந்திரனின் ராசியான கடக ராசியை சூரியனும் சந்திரனும் ஆக்கிரமித்திருப்பதால் ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆடி அமாவாசை அன்று,  மறைந்தவர்களின்  ஆவிகள் பிரசாதங்களை ஏற்றுக்கொள்வதற்கு அதிக விருப்பத்துடன் இருப்பதாகவும், அவர்களின் வாரிசுகள் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது திருப்தி அடைவதாகவும் அறிகிறோம். நம்புகிறோம்.  ஆடி மாதத்தில், சூரியன் தெற்கு நோக்கி தனது இயக்கத்தைத் தொடங்குவதை தக்ஷிணாயனம் என்கிறோம். (தக்ஷிண் என்றால் தெற்கு, அயனா என்றால் பயணம்)
மகாபாரதத்தில் ஒவ்வொரு மனித ஆன்மாவும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று முக்கியக் கடன்களுக்குக் கடன்பட்டிருக்கிறது என்று அறிகிறோம்.  அவற்றில் ஒன்று ‘பித்ரு ரின்’ (முன்னோருக்கு கடன்). தர்ப்பணம் செய்வதன் மூலம்  நிவர்த்தி பண்ணுகிறோம்.
ஆடி அமாவாஸ்யா  தர்ப்பணத்தை   நீர்நிலைகளில் (கடல், குளம், ஆறு அல்லது ஏரி) செய்வது எப்போதும் சிறந்தது. தர்ப்பணம் சடங்கைத் தொடங்குவதற்கு முன், புனித நீர் ஆதாரங்களில் ஸ்நானம் செய்து  அசுத்தங்களிலிருந்து  விடுபடுகிறோம்.   இன்று முக்யமாக  தென்னிந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் ஏராளமானோர் கூடி தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துவார்கள்.  கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமம் மற்றும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்கள் பிரசித்தம்.
ஆடி அமாவாசை  தர்ப்பணம்  என்ன புண்யம் தரும்?
மறைந்த  முன்னோர்களின் ஆன்மாக்களை முக்தி பெற செய்கிறோம். அவர்கள் ஆசியால்   எதிர் மறை கர்மாவிலிருந்து விடுதலை பெற்று  வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் பரிசாகப்  பெறலாம். அடுத்த  தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.   நான் உங்களுக்கு கருட புராணம் எழுதி வருகிறேன், அதில் எவ்வளவு விஷயங்கள் இதைப் பற்றி வருகிறது ஞாபகம் இருக்கிறதா?  திரும்ப படியுங்கள். புரியும்.  முன்னோர்களுக்கு  திலம் (எள்) மற்றும் நீர் வழங்குவது அவர்களை மகிழ்விப்பதோடு,  நமக்கு  நீண்ட ஆயுள், வெற்றி, சந்ததி, கடன் நிவாரணம் மற்றும் எதிரிகளை அழிக்கும் பலன் கிடைக்கிறத. நம் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க  அவசியம் முன்னோர்களை திருப்திப்படுத்த வேண்டும்.
ஜோசியர்கள் பேசும்  பாஷையில்  சூரியனை  ”பித்ருகாரகன்”  என்றும்  சந்திரனை ”மாத்ருகாரகன்”  என்பார்கள். அமாவாசை அந்த ரெண்டு   ஒரே ராசியில்  ஒண்ணாக சேர்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் நாள். சூரியன்  சந்திரன் இருவரும் நமது  தந்தை தாய் போன்ற  அம்சம்.  எனவே  தந்தை தாய் இல்லாதவர்கள் இவர்களை தந்தை  தாயாக  வணங்குகிறோம் . அன்று  முன்னோர்களை இவர்கள் சேரும் நாளில் த்ரிப்திப் படுத்துகிறோம். ”திருப்தியதா, திருப்தியதா, திருப்தியதா” என்று  தர்ப்பை மூலமாக அவர்களை ஆவாஹனம் செய்து மனமார,  பக்தியுடன், பாசத்தோடு   மூன்று முறை  எள்ளும் நீரும் விட்டு அவர்கள்  ஆசி பெறுகிறோம்.
சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று  சொல்வார்கள். பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில்  வெங்காயம்,பூண்டு, முட்டைகோஸ், முள்ளங்கி,  நூல்கோல், போன்ற காய்கறிகளை உபயோகிப்பது வழக்கமில்லை.   ஒரு பெண் என்னிடம் நேற்று மத்தியானம்,   ”இன்னிக்கு  ஆடி அமாவாசை மத்யானமே ஆரம்பிச்சுடும். எங்க வீட்டிலே சைவம்  சாப்பிட வரீங்களா”  என்று கூப்பிட்டாள் .  நான் உபவாசம் விரதம்  பித்ரு   தர்ப்பணம் பண்ணிட்டு   பிரம்ம யஞம்  பண்ணிட்டு அப்புறம் தான்  வீட்டிலே  ஆகாரம்”  என்று சொன்னேன்.
ஜோசியர்கள் அடிக்கடி சொல்வது நினைவிருக்கிறதா?  ”ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைவாக  இருப்பவர்  சுகமாக வாழவேண்டும் என்றால்  அதற்கு உதவுவது  தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.   முன்னோர்களை வழிபடுவது தான்   பிதுர் தர்ப்பணம், ஸ்ராத்தம்  ஆகியவை.  தெய்வம், தேவர்களுக்கு அடுத்தபடி  பித்ருக்கள் தான்.  பித்ருலோகம் என்றே ஒன்று தனியாக  இருக்கிறது.  அமாவாசை தினம் பித்ருக்கள் நமது தர்ப்பணத்துக்காக  ஆவலுடன் காத்திருப்பவர்கள்.  நமது பெற்றோர்  பாட்டன் பாட்டி  இறந்த திதி, பக்ஷம் , மாதம்  அறிந்துகொண்டு,  ஒவ்வொரு தமிழ்வருஷமும்   அதே திதியில்  நாம்  பிண்டப்ரதானம்  செய்து  வணங்குவது தான் ஸ்ராத்தம் . இதை செய்வதால்  குடும்பத்தில்  க்ஷேமம் உண்டாகும்.   சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .
ஒவ்வொரு அமாவாசையும்  செய்யும் தர்ப்பணம்  பித்ருக்களை  மகிழ்வித்து ஆசியை பெற்றுத் தருகிறது.  பித்ருக்களின் இறந்த திதி தெரியாதவர்கள்  ஆடி அமாவாசை அல்லது தை  அமாவாசை அன்று  ஸ்ராத்தம் செய்து  புண்ய பலன்  பெறலாம்.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிப்பதை  தக்ஷிணாயன  புண்யகாலம். ஆடி அமாவாசை  ஆரம்பம்.   வட திசையில்   சூரியபயணம்   கடக ராசியில்  சூர்யா சந்திர சந்திப்பு. உத்தராயணம். அப்போது வருவது தை  அமாவாசை  மகர ராசியில்   சூரியனும் சந்திரனும் இணையும்  நாள்.

ஆடி அமாவாசையன்று   கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில்  சமுத்திர ஸ்னானம்  பித்ரு தர்ப்பணம்   சிறப்பாக  நடக்கும்.  ஸ்ராத்தம் ஏற்பாடு செய்வது பித்ருக்கள் ஆசியை பெற அனுகூலமாகும்.   காவிரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கமத்தில், வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில்  ஸ்னானம் செய்து  ப்ரோஹிதர்கள் உதவியுடன்  பித்ரு தர்ப்பணம் செய்வது  பாரம்பரியம்.
அங்கெல்லாம் செல்ல இயலாதவர்கள்  அருகே உள்ள  ஆறுகள் குளங்களில் ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்யலாம். தக்ஷிணாயன ஆடி அமாவாசை வாத்தியாருக்கு சம்பாவனை, தக்ஷிணை கொடுத்து , அன்னதானம் செய்து,   மாற்றுத்திறனாளிகளுக்கு  வஸ்திர தானம் செய்வது  முன்னோர்களுக்கு திருப்தி அளிக்கும்.  நமது தர்ப்பணத்தால் தான் முன்னோர்கள் பாபம் குறையும்.  நமது தர்ப்பணம் பெற  அன்று நம்மைத் தேடி வருகிறார்கள்.  ஆகவே ஸ்ரத்தையுடன் அவர்களை வரவேற்று  திருப்தி படுத்தி  வணங்கி  ஆசி பெறுகிறோம்.   சூரியனை பார்த்துக்கொண்டு கைகளில் காகத்திற்கு வைக்கும் சாதத்தை எடுத்துக்கொண்டு சூரியனைப் பார்த்து பிறகு உங்கள் கைகளில் இருக்கும் அன்னத்தை பார்த்து  கீழே உள்ள  மந்திரத்தை  சொல்லவும்      *ஓம் சர்வ பிண்ட ரட்சகம் பரிபூரண பித்ரு அனுக்கிரகம் நமோ நமஹ*….ஓம்குருவே துணை…. மனதுக்கு திருப்தியாக இருக்கும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *