SRIMAD BHAGAVATHAM – 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  – 10து காண்டம் –   நங்கநல்லூர்  J K  SIVAN

கிருஷ்ணா   நீ   யாரப்பா….?

”பரீக்ஷித்,   மேலே சொல்கிறேன் கேள்.
‘ எல்லா  குழந்தைகளையும் போல  கோகுலத்தில் ரெண்டு குழந்தைகள் தவழ ஆரம்பித்தன. ஒரு குழந்தை அதற்குள்ளேயே  மூன்று ராக்ஷஸர்களை  கொன்றுவிட்டது என்று உனக்கு தெரியுமல்லவா?

”ஆஹா  பலராமனும் கிருஷ்ணனும் தானே அவர்கள் ”

”ஆமாம்.  வ்ரஜபூமியில் எங்கும் தரையில்  பசு கோமியமும் சாணமும் கலந்த மண் தான். காலில் சலங்கை, தண்டை, கொலுசு ஜல்ஜல் என்று சங்கீதமாக ஒலிக்க  இருவரும்  கைகளையும், முழங்கால்களை தரையில் ஊன்றி நந்தகோபன் அரண்மனை முழுதும் உலாவினார்கள்.  நந்தகோபன், ரோஹிணி , யசோதை, மற்ற அநேக  கோப கோபியர்கள் எல்லோருமே  அழகான குழந்தைகள்  கண்ணன் பலராமன் இருவரும் தவழ்வதை ஆனந்தமாக  ரசித்தார்கள். கிருஷ்ணன் விஷமம் சற்று அதிகம், தவழ்ந்து கொண்டே போய்  கன்றுக்குட்டியின் வாலை  பிடித்திழுப்பான்.  எங்கும்  தவழ்ந்து சென்றால் ஆபத்து என்று அவர்கள்  இருவரை யும்  யசோதை ரோஹிணி மற்றும் கோபியர்கள் பலர்  கண்காணித் துக்கொண்டே இருந்தார்கள். 

நாட்கள் நகர நகர  மெதுவாக கிருஷ்ணனும்  பலராம னும் நடக்க ஆரம்பித்தார்கள்.  இன்னும் சில காலம்  ஓடியபின்  கிருஷ்ணனும் பலராமனும் மற்ற  கோப சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். கிருஷ்ணன் விஷமங்கள் சொல்லி மாளாது.  யார் வந்து  முறையிட்டாலும்  யசோதை  அமைதியாக  ஆனந்த மாக  கிருஷ்ணனின் பால்ய  லீலைகளை கேட்பாள்.

”யசோதை, உன் பிள்ளை இன்னிக்கு என்ன செய்தான் தெரியுமா?  பால் கறப்பதற்கு  முன்பே கன்றுக்குட்டியை அவிழ்த்து பசுவிடம் விட்டுவிட்டான். இன்னிக்கு பால் அவ்வளவு தான்… டேய் கிருஷ்ணா என்று அதட்டுவதற் குள் ஓடிவிட்டான்.” யாரா வது அவனை விரட்ட  கோப மாக பார்த்தால், அவன் சிரிப்பான். அந்த சிரிப்பில் கோபம் காற்றில் பறந்து போய்விடும்.

 இன்னொரு கம்பளைண்ட்:
”உன் பிள்ளை   ஒரு  பெரிய  குரூப் வைத்திருக்கிறான். எல்லா  வாண்டுகளுக்கும்  ஒவ்வொரு வீட்டிலும்  எங்கே  வெண்ணை தயிர் பால் இருக்கும் என்று   தெரியும். நைஸாக  எடுத்து விடுவார்கள்.  அவர்கள் பின்னால்  ஒரு குரங்கு சாம்ராஜ்யமே சுற்றும். அவற்றுக்கு தெரியும், அவர்களும் சாப்பிட்டு விட்டு அவற்றுக்கும் தருவார்கள் என்று.   தயிர்  வெண்ணை பால், பானைகள் உடைந்து  காணப்படுகிறது. எல்லாம் உன் பிள்ளை லீடராக செய்யும் வேலைகள்..

இன்னொருத்தி ;  ‘கிருஷ்ணன் கையில் அகப்படாதபடி  வெண்ணை தயிர் பானையை ஒளித்து  வைத்திருந் தேன். அதனால் ஏமாற்றமும் கோபமும் கொண்டு கிருஷ்ணன் மற்றவர்களுடன் சேர்ந்து எங்கள் வீட்டுக் குழந்தைகளை நகம் பதிய கன்னத்தில்,  தொடையில் எல்லாம் கிள்ளி விட்டிருக்கிறான் பார்”  என்று அழும் குழந்தைகளோடு வருவாள் .

கிருஷ்ணனும்  அவன் கூட்டமும்  வந்து எடுக்க முடியாதபடி  உயரே  வீட்டு உத்தரத்தில்  கயிறு கம்பி எல்லாம் கட்டி உரைகளில் பால் தயிர் வெண்ணை எல்லாம் நிரப்பி வைத்தார்கள்.  அதற்கும் வழி வைத்திருந்தான் கிருஷ்ணன். மற்ற பையன்களோடு சேர்ந்து  ஒருவர் மேல் ஒருவராக ஏறி  உயரத்தில் இருக்கும் வெண்ணெய்ப்பனையில் கை  விட்டு வெண்ணை எடுப்பான், இல்லை வெண்ணை சட்டியை கவிழ்த்து கீழே  மற்றவர்களுக்கு குடிக்க கொட்டுவான்.  காலி பானைகளை எடுத்து உடைப்பான். இருட்டு அறைகளில் கிருஷ்ணன் பலராமன் அணிந்திருக்கும் நவமணிகள் பளிச்சென்று ஒளி வீசும். அந்த வெளிச் சத்தில் பானைகளை தேடுவார்கள்.குச்சிகளால் தட்டி உடைத்து அதிலிருந்து சொட்டும், ஒழுகும் பால் தயிர் வெண்ணெய்களை வயிறு முட்ட எல்லோரும் குடிப்பார்கள்.  மரப்பலகைகள், கண்டா,  முண்டா,  சாமான்களை அடுக்கி  ஏணி மாதிரி அதன் மேல் ஏறி பானைகளை அடைவார்கள்.

கண்ணனோடு  பெண் குழந்தைகளும்  சேர்ந்து விளையாடுவார்கள்.  அவனோடு ஓடி ஆடி, நடனமாட அவர்களுக்கு பிடிக்கும்.  எல்லோரையும் அழகால் மயக்குபவன் அல்லவா?  கண்ணன்  ராஸலீலை இரவு பகலாக  நடக்கும்.  ஜெயதேவர் பாடுவதை  கீத கோவிந்தத்தில் படியுங்கள் பாடுங்கள் ரசியுங்கள். நானும் நிறைய  பாடி இருக்கிறேன். எழுதி இருக்கி றேனே.

 சிறுவன்  கிருஷ்ணன், பலராமனோடும் மற்ற  சிறு பையன்களோடும் சேர்ந்து  மரங்கள்  தோப்புகள்  வீடுகள்  யமுனை நதிக்கரை மரங்களின் அடியில்,  யமுனை ஆற்றில் இறங்கி நீரில்  குளித்து  எல்லாம் விளையாடுவார்கள்.

ஒருநாள்  கிருஷ்ணன் சில  பயங்களோடு  நாவல் மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்தான்.  அவனைப்பற்றி வழக்கம்போல் அன்றும்  ஒரு  கம்ப்ளையிண்ட். முறையீடு.
 ”அம்மா, கிருஷ்ணன் வாய் நிறைய  மண்ணை தின்னிருக்கான் வந்து பாரு”
”ஐயையோ , சின்ன  குழந்தை இவ்வளவு மண்ணை தின்றால் உடம்புக்கு என்ன ஆகும். வியாதி வருமே.. என்று கவலை யோடு ஓடினாள் யசோதை.  தோட்டத்தில் பெரிய நாவல் மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். மற்ற பையன்கள் மரங்களின் கிளைகளில், எல்லோரும் நாவல் பழங்களை பறித்து  தின்று கொண்டிருந்தவர்கள்.
‘அந்த பொடியனின்  விஷமம் தாங்க முடியவில்லை. கொஞ்சம்  பெரிய  பையன்கள்  விளையாடும்போது  தானும் அவர்களோடு   இணைவான். அவர்களோ
முதலில்  அவனை  லக்ஷ்யம்  செய்ய வில்லை.  போகப் போக  மூர்த்தி சிறிதானாலும்  விஷம கீர்த்தி   பெரிய தாக  தென்படவே  கூட்டு  சேர்த்து கொண்டார்கள். அவன் அம்மா  யசோதாவுக்கும் சற்று நேரமாக அவன் தானாகவே விளையாடுவது  சௌகர்யமாக இருந்தது. கொஞ்ச நேரமாகவாவது  அவன் விஷமம்  வீட்டில் இருக்காதே..   ஆயர்பாடி  நந்த கோபன்  வீட்டு பின்புறம்  அந்த  பெரிய  நாவல் மரத்தில்  நிறைய  பழங்களை  பார்த்து விட்டு,பெரிய பையன்கள்  மரம் ஏறினார்கள்.  “கிருஷ்ணா,  நீ  சின்னவன்,  மரத்தில்  ஏறாதே.  நாங்கள்  மேலே ஏறி  கிளைகளை உலுக்கும்  போது கீழே விழும் பழத்தை எல்லாம்  பொறுக்கி சேகரி. பிறகு  நாங்கள்  இறங்கி வந்தவுடன் அனைவரும்  பங்கு போட்டு  திங்கலாம்.”
“சரி”  என்று தலையாட்டிவிட்டு  பழங்கள்  மேலேயிருந்து  உதிர்ந்ததும்  ஒவ்வொன்றாக  அப்படியே  மண்ணுடன்
தின்று கொண்டிருந்ததை ஒரு  பயல்  பார்த்து விட்டான்.  “டேய்,  எல்லாரும்   அங்கே  கீழே  நடக்கிற அக்ரமத்தை பாருங்கடா. முக்காவாசி  பழத்தை  அந்த  கிருஷ்ணன்  தின்னுண்டு  இருக்கறதை”.   இந்த கிருஷ்ணன் ரொம்ப  மோசம். எவ்வளவு  சாமர்த்தியம்  பார்த்தாயா. எப்போ  இவன்  நம்பளை ஏமாத்தினானோ  அவனை பத்தி மண்ணு திங்கறான் என்று அவ அம்மாவிடம் சொல்லி டறேன். அவள்  அவனுக்கு  முதுகிலே  நல்லா டின் கட்டிடுவா” என்று  ஐடியா  கொடுத்தான்  ஒருவன். அதே போல்  நடந்தது.  யசோதை  கோபமாக  வெளியே  வந்தாள்.  தூரத்தில் மரத்தடியில்  பையன்கள்  கூட்டம்.  நடுவே  தரையில்  கிருஷ்ணன்  அமர்ந்திருந்தான்.  வாய்  நிறைய  பழங்கள்.  உதடு  கன்னம், தாடையில் எல்லாம்  கருநீல  நாகப்பழ  கலரில்  மண்ணோடு கலந்து  சாறு அப்பி கிடந்தது.

“உன்னோடு  ஒரு நாள்  கூட  நிம்மதி  என்பதே  கிடையாது எனக்கு. எப்பவும்  ஏதாவது  ஏடாகூடம்.  வாய்  நிறைய  இவ்வளவு  மண்ணு  தின்னால்  உடம்பு என்னத்துக்கு  ஆகும்.  திற  வாயை?  இல்லை  என்று  தலையாட்டினான்  பேசவில்லை. பேச  முடியாதவாறு  வாய் நிறைய  நாகப்பழம்.  அடம் பண்ணினே  பிச்சுடுவேன்  பிச்சு.  மரியாதையா  வாயை திற.  கண்கள் மலங்க மலங்க  பார்த்தன.  தலையை  மீண்டும் அசைத்தான்.  பிடிவாதமா  பண்றே.  இப்ப பார்.  யசோதா  கிருஷ்ணன்  வாயை  கையால்  திறந்தாள். வாய் மெதுவாக திறந்தது.  உள்ளே  எவ்வளவு  மண் இருக்கிறது  என்று கவலையோடு  பார்த்தாள்.  ஆனால்  அவளுக்கு  மார்பு  படபட என்று  அடித்துக் கொள்ள,  கண்கள் இருள கை கால்  நடுங்க தலை சுற்றியது.

கிருஷ்ணன்  வாயில்  மண் அல்ல மண்ணு லகம் வானுலகம்,  இந்த  பிரபஞ்சமே தெரிந்தது.  அனைத்தும்  சுழன்றது.  இதோ யமுனை,  கங்கை,  ஹிமாசலம்,  இதோ  ஆயர்பாடி  கூட  தெரிகிறதே  அவள்  வீடு,  அந்த மரம், அதன் கீழே  அவள்,  எதிரே  தரையில் உட்கார்ந்து கொண்டு  கிருஷ்ணன், திறந்த  வாய்,  அந்த  திறந்த வாய்க்குள்  மீண்டும்  பிரபஞ்சம்,  திரும்ப திரும்ப  அளவில்லாத  பிரபஞ்சம்…”

யசோதை  கையை  அவன் வாயில் இருந்து  எடுப்பத ற்குள்  அவளே  தரையில்  மயங்கி விழுந்தாள்.  அவன்  வாயை மூடிக்கொண்டு சிரித்தான்.  சற்று நேரத்தில்  சுதாரித்து கொண்டு எழுந்தாள்  யசோதா, 

என்  கிருஷ்ணா, நீ  யார்…? என்று  அவள்  வாய்  மெதுவாக முணுமுணுத்தது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *