SRIMAD BHAGAVADHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 10  வது காண்டம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN
”பிள்ளை வரம்”

”குருநாதா,  சாக்ஷாத் மஹா விஷ்ணுவே  தனது மகன் கிருஷ்ணன் என்று அந்த தாய் யசோதை புரிந்துகொண்டாளா?”என்று கேட்டான்  ராஜா பரீக்ஷித்.
”சொல்கிறேன் கேளப்பா”
‘ யசோதைக்கு தலை சுற்றியது.  அவள் கிருஷ்ணனின் வாயைத் திறந்து மண்ணிருக்கிறதா என்று தேட, மண்ணுலகம் மட்டுமல்ல, விண்ணுலகமும் வான் வெளியும்  பிரபஞ்சமும் சுழன்றுகொண்டே இருப்பது தெரிந்தது. ப்ரபஞ்சத்
தைப் போலவே அவள் தலையும் சுழன்றது. மூர்ச்சையானாள் . தாய் மயங்கி அதிரிச்சியில் விழுந்ததை சேய்  பார்த்துக்கொண்டிருப்பானா?  அவள் தானாகவே தெளிந்து எழ வைத்தான்.தானும் சாதாரண குழந்தையாக வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்தான்.
யசோதை தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்: ”நான் கண்டது வெறும் கனவா?  எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?உண்மையிலேயே இந்த  குழந்தை மாயா ஜாலம்  காட்டுகிறதா, இது மாயமா  மந்திரமா, மஹத்வமா?  கனவு  நிச்சயம் கிடையாது நான் தான் தூங்கவே இல்லையே. விழித்துக்கொண்டு  கிருஷ்ணன் வாயை நான் தானே  என் கைகளால் திறந்தேன். தேவமாயையா இது?  எதற்கு தேவர்கள் எனக்கும் என் குழந்தைக்குமிடையே  மந்திர மாயம் எல்லாம்  உண்டாக்க வேண்டும். எனக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?  நான் ஒரு சாதாரண  இடைப்பெண். ஆகவே இது தேவர்களின் மாயை இல்லை.  ஒருவேளை எனக்கு திடீரென்று உடல்நிலை மோசமாகி கண்ணிருட்டி  இப்படி ஒரு  பயங்கர காட்சியா? எனக்கு மனோவியாதி எதுவும் இல்லையே.மூளை நன்றாக வேலை செயகிறதே. நான் பைத்தியம் இல்லையே.  அப்படியென்றால் இதற்கு ஒரே பதில், என் பையன் கிருஷ்ணன் அசாதாரணமானவனோ?  எனக்கு தெரியவில்லையே. அப்படியென்றால் நான் அவனை சரணடைகிறேன்.  என்னால் புரிந்து கொள்ள முடியாதவன் கடவுள் சக்தி கொண்டவனாகத்தான் இருக்கவேண்டும்.  தனது திறந்த வாயை காட்டி என்னை வாய் திறந்து பேசமுடியாமல் செய்துவிட்டானே.   பகவானின் மாயையினால் தான் நான் தப்பாக  பெருமிதம் கொண்டவளாக இருக்கிறேனோ, நான் ஒரு ராணி, என் புருஷன் நந்தகோபன் ஒரு மஹாராஜா, நான் பணக்காரி  எங்களிடம் நிறைய பசு இருக்கிறது , இந்த கிருஷ்ணன் என் மகன் என்று? இல்லவே இல்லை. இது எதுவுமே எனக்கு சொந்தம் இல்லை. எல்லாம் அந்த பகவான் தந்தது. அவனுடையது.  நான் ஒன்றுமில்லாதவள்.  அடிமை.  அவனுக்கு நானே சொந்தம்.”

யோக மாயையின் சக்தியால் யசோதை இந்த நினைவுகளை மறந்து பழையபடி ஒரு தாயானாள் . வாத்சல்யத்தோடு கிருஷ்ணனை பார்த்தாள்.ஆசையோடு அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டாள் .”இனிமே  மண்ணு திங்காதே” என்றாள் . ”மாட்டேன்”என்று தலையாட்டினான் மாதவன்.

++முன்பு நான்  ஒரு முறை எழுதினது:   ”ஹரியும் சிவன்  ஒண்ணு  அறியாதவன் வாயில் மண்ணு”  என்ற சொல் கல்லைக்  கண்டால் நாயைக் காணோம்  என்கிற மாதிரி தப்பான அர்த்தத்தை மக்களிடையே பரப்பும் ஒரு வாக்கியம். அறியாதவன்
 வாயில் மண்ணு என்பது  சிவனும் விஷ்ணுவும்  ஒன்று தான் என்று தெரியாதவனுக்கு வாயில் மண்ணு தான் விழும் சாப்பிட  என்கிற அர்த்தமே இல்லை.   மண்ணைத்தின்றதால்  என் குழந்தைக்கு  நோய் வருமோ என்று பயந்து கவலையில்   ”கிருஷ்ணா, வாயைத்  திற”  என்கிறாள். கண்ணனோ,  நான் மண்ணையே திங்கவில்லை என்று சொல்கிறான்.   அவன் கன்னத்தில் மண் தூள்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவனைக்  கட்டாயப்படுத்தி தானே  அவன் வாயைத் திறக்கி றாள்.  யசோதை கண்ணன் வாயில்  மண்ணைப் பார்த்தாளா?  ஆமாம், மண்ணை மட்டுமல்ல  விண்ணையும்
 பார்த்தாள் .  மயங்கினாள். விழுந்தாள்.   ”அரி என்கிற யாதவ குமாரன் தனது  வாயில்  மண்ணாகிய  இந்த பூமி, ஆகாசம், மேலுலகம் கீழுலகம் சகலத்தையும் தான் உள்ளடக்கியவன் என்பதை வாயில் காட்சியாக  தெரிவித்தான், தெளிவித்தான்  என்பது தான்  ”அரி  யாதவன் வாயில் மண்”   என்ற சொல்லுக்கு  அர்த்தம். ”++

கிருஷ்ணனின் ரெண்டு கன்னங்களிலும்  மாறி மாறி முத்தம் கொடுத்தாள்  யசோதை. யசோதை புண்யம் பண்ணியவள்.  அவளது பக்தி பிரேம பக்தி.  சாதாரணமாக  பக்தர்களை  நாலுவகைப்படுத்துகிறோம்.  ‘அர்த்தோ , ஜிகினாஸோ, அர்த்தார்த்தி, ஞானி ச:” என்று.  இதற்கு அப்பாற்பட்டவர்கள்  நந்தகோபன் யசோதை தம்பதியர். தேவகி கிருஷ்ணனை பிறந்ததும் பிரிந்தவள். யசோதை கிருஷ்ணன்  தானாகவே  பிரிந்தாவனத்திலிருந்து பிரியும் வரை அவனை ஒரு கணமும் பிரியாதவள்.

” குருநாதா,  பெற்ற தாய் தந்தையர்  வசுதேவர், தேவகியை விட  நந்தகோபன் யசோதை அதிக பாக்யம் புண்ணியம் பண்ணியவர்கள் இல்லையா சுவாமி?  என்று கேட்டான் பரீக்ஷித் மஹாராஜா.

”பரீக்ஷித், உனக்கு ஒரு ரஹஸ்யம் சொல்கிறேன் கேள்: அஷ்டவசுக்களில் ஒருவன்  த்ரோணன், இந்த த்ரோணன்  பாரதத்தில் வரும் துரியோதன சபையின்  கௌரவர்களின்  தனுர் வித்தை  குரு  துரோணர் இல்லை.)  தாரா  அவன் மனைவி.  குழந்தைகள் இல்லை.  மஹா விஷ்ணுவை வேண்டி  ப்ரம்மாவின் அறிவுரைப்படி  மந்திர மலையில் அன்ன ஆகாரம் இன்றி   தவம் இருந்தார்கள். பல காலம் ஆனபிறகு  ப்ரம்மா  தோன்றி  உங்கள் விருப்பம் என்ன? என்று கேட்க, பரமாத்மா மஹா விஷ்ணுவே எங்களுக்கு மகனாக வேண்டும்.”  என்று கேட்டார்கள்.  ”இந்த பிறப்பில் அது நிறைவேறாது. உங்களது அடுத்த பிறப்பில் நிச்சயம் அது நிறைவேறும்” என்று அனுக்ரஹித்தார்  ப்ரம்மா.அடுத்த பிறவியில் அவர்கள்  நந்தகோபன், யசோதை.இன்னும் சொல்கிறேன்.
 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *