PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN
அதிசய தீர்க்க தரிசனம்.
வாட்ஸாப்ப் வந்தாலும் வந்தது, அடேயப்பா. மொபைலில் படிக்காமலேயே  எத்தனையோ  அல்ப விஷயங்களை அழித்து அழித்து என் விறல் கரைந்து குறைந்து விட்டது.  ஆனால் நேற்று வந்த ஒரு போட்டோ வில் ஒருவர்   என்னைப்  பார்த்த பார்வையில் என் மனமே  கரைந்து விட்டது. அவர் பார்வையிலேயே என் பாபங்கள் குறைந்துவிட்டது போல ஒரு திருப்தி. அந்த போட்டோவை அனுப்பினவருக்கு ஆயிரம் நன்றி நமஸ்கரங்கள். அவர் பார்வை கூர்மையானது.பலமுறை நான் அதை நேரிலே கண்டிருக்கிறேன்.  அவரோடு பேசி இருக்கிறேன். ஆனால் அப்போது எனக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாத இளம் வயது. ”என்னடா என்னையே  பாத்துண்டிருக்கே? என்னாச்சு நோக்கு?””உங்களுக்கு  கோவம் வருமா பெரியவா?”புன்சிரிப்பு.  ”தப்பு பண்ணாதேங்கோ ன்னு கொஞ்சம் காரமா சொல்வேன். ஏன் தப்பு பண்ரேள் னு பளிச்சுனு கேப்பேன். அது பேரு கோபமா. கோபம் வந்தா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? பிறத்தியார் தப்பு பண்ணா நான் அவாளை  தண்டிக்க மாட்டேன்.என்னை நானே தண்டிச்சுப்பேன். எனக்கு நானே தண்டனை கொடுத்துப்பேன்,மௌனவிரதம், உபவாசம்.””உங்க  குணம் தெரியும் பெரியவா?”என்னடா தெரியும் உனக்கு. சொல்லேன்’  கேக்கறேன்”    ஒரு  கேலி புன்னகை சிரிப்பு.  ”இது தான் எனக்கு தெரிந்த  ஒரு  சம்பவம்: நான் படித்தது”.
திருவிடமருதூர்  மஹாலிங்க சுவாமி புராதனமானது.  மத்யார்ஜுனம் என்று பெயர் பெற்ற புனித சிவஸ்தலம். அன்று சித்திரா பவுர்ணமி. பதினொரு ரிக்வித்களோடு ருத்ராபிஷேகம்,  மஹா ருத்ர  ஜபம் காலை 7 முதல் பிற்பகல் 2 வரை நடக்கிறது. எண்ணற்ற  ப்ராமண வேதவித்துள் சேர்ந்த மந்த்ர ஜபம் காதுக்கு கேட்கிறது. அற்புத அனுபவம்.  இதை  பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணசாமி ஐயர்.பெரியவா மேல் பக்தி கொண்டவர்.
 மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சி மடத்தில்  மஹா பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி நின்றார்.நிறைய வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம்.   மஹாபெரியவா முன்னால்  நின்ற மிராசுதாரை  புருவத்தை உயர்த்தி பெரியவா “என்ன விஷயம்?”என்று  ஜாடையாக  கேட்கிறார். மிராசுதார் பவ்யமாக தேங்கா, பழம், வில்வம் இலை, விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.
“இது எந்த கோயில் பிரசாதம்?”
“திருவிடைமருதூர் மஹாலிங்க சுவாமி கோயில்லே மஹா ருத்ரம் ஜபம் அபிஷேகம் பண்ணினேன். அந்த பிரசாதம் பெரியவாளுக்கு சமர்ப்பணம் .   அனுக்கிரஹம் ஆசிர்வாதம் பண்ணனும் ….”
பெரியவா தட்டை பார்த்தா.. “நாராயணசாமி, நீ பணக்காரன். மிராசுதார், ருத்ராபிஷேகம்  தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா?”
”இல்லை பெரியவா. நானே தான் பண்ணினேன்!” (“நானே” கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)
“ஓஹோ.  லோக க்ஷேமத்துக்காக தானே?”
“அப்படின்னு இல்லை. ரெண்டு மூணு வருஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லே. வெள்ளாமை போறலை. கவலையோட முத்துசாமி  ஜோசியரை கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார். நல்ல விளைச்சல் வரணும் என்று   மஹா லிங்கஸ்வாமியை வேண்டிண்டு  பண்ணினது.  பெரியவாளுக்கு அபிஷேக பிரசாதம் கொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ….”  நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே நிறுத்தினார்.”
” ஒ! அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமத்துக்காகவோ பண்ணலை” மஹா பெரியவா கண்ணை மூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. நாராயணசாமி கொண்டுவந்த பிரசாதத்தை தொடலை.”ருத்ரஜெபத்துக்கு எத்தனை ரித்விக்குகள் வந்தா? “
“பதினொன்று பேர் பெரியவா”
“யாராரு,  எங்கேருந்தேல்லாம் வந்தா?” –
பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.
மிராசுதார் ஜோல்னா பையில் இருந்து ஒரு சிறு  நோட்டுப் புத்தகத்தை எடுத்து அதில் இருந்ததை படித்தார். “திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள், ஸ்ரீனிவாச கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள்……” பெரியவா இடைமறித்து:
“ஒ! தெரியும்,  எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்களஆச்சே .. உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு?””
மிராஸ்தாயாருக்கு  ஆச்சர்யம். ”அவர் பேர்  இருக்கு பெரியவா, நேத்திக்கு அவரும் வந்தார்.
“பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே அதாரிட்டி. வயசு அதிகமிருக்குமே இப்போ. கஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்லமுடியறதாமே”
துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராஸ்தார் பதிலளித்தார் :
” ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல முடியலே அவராலே மொத்தத்தில் சொல்ல வேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று எனக்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோம் னு கூட தோணித்து””
“உன்கிட்ட பணம் இருக்குங்கிறதாலே  எதை வேணுமானாலும் சொல்லாதே. தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தியோ  அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பத்தியோ  உனக்கு என்ன  தெரியும்? அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ?? பெரியவா கண் மூடிக்கொண்டது :  பிறகு மஹா பெரியவா பேச ஆரம்பித்தார்:
”நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு? கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும்போது   ” வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள் என்று அவர்கிட்டே கேட்டி யா?” அங்கிருந்த அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டு கொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில் பிரவாகத்தோடு “தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை தத்ரூபமாக சொல்றேள் “
“அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?
“ஹை  வோல்ட்டேஜ் ஷாக்  தாக்கியது மிராஸ்தாரை. தட்டு தடுமாறிக்கொண்டு “தலா பத்து ரூபா கொடுத்தேன்” “தெரியும். எல்லாருக்குமேவா? ” வாயடைத்து,  விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிய  மிராஸ்தாரால்  பதில் பேச முடியவில்லை. மஹா பெரியவா தொடர்ந்தார்.
“எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ. நானே சொல்றேன். எல்லாருக்கும் பத்து பத்து ரூபா கொடுத்துண்டே வந்தே.  வெங்கடேச கனபாடிகள் கிட்ட வந்து சம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே. குறைச்சு மந்திரம் சொன்னதாலே  குறைச்சு சம்பாவனை.. அதிலே உனக்கு சந்தோஷம். ஆனா கனபாடிகள் ஒண்ணும்  சொல்லாமே  அதை வாங்கிண்டா அப்படி தானே ?”  மிராஸ்தார் இடி தாக்கியதுபோல்  துடித்தார்.”பெரியவா நான் திருந்திட்டேன். என்னை மன்னிக்கணும்” — வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும் அதிர்ச்சி.   ஆஹா   மஹா  பெரியவாளின் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது. மஹா பெரியவா இன்னொரு  பிரம்மாஸ்திரம் வீசினார்.
“அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் வீட்டில் அனைவருக்கும் போஜனம் நடந்ததே. நீ தானே சக்கரைபொங்கல் பரிமாறினே? நெய், திராக்ஷை,  முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும் திருப்தியா சாப்பிடணும்னு பாரபட்சம் இல்லாம  பரிமாரினியா?,மிராஸ்தார் நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை .மஹா பெரியவாளே தொடர்ந்தார் :

“நானே சொல்றேன். நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே. வெங்கடேச கனபாடிகள் இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலை. காதிலே விழாதது மாதிரி நகந்துட்டே. சரியா?  இது பந்தி தர்மமா? அவர் மனஸை  நோகடிச்சு நீ சந்தோஷபட்டே”. இதை சொல்லும்போது பெரியவாளுக்கே ரொம்ப துக்கம் மேலிட்டது. நா தழுதழுத்தது.  நாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.
அமைதியாக  பதினைந்து நிமிடம் நகர்ந்தது. . பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார்.
” தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்பவர்.  எண்பதாறு  வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லை. அவர் நாடி நரம்பு மூச்செல்லாம் பரமேஸ்வரன். ரத்தம் பூரா ருத்ர ஜபம். ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மஹா  புருஷன். அவருக்கு நீ பண்ணினது மஹா பாவம். நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம்  அவர் என்ன பண்ணினார்னு  உனக்கு தெரியுமா.?  ஆத்துக்கு   திரும்பலை. நேரா திருவிடை மருதூர் கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மஹா லிங்கம் எதிரே போய் நின்னு  கண்லே தாரை தாரையா ஜலத்தோடு  “அப்பா ஜோதி மகாலிங்கம், நான் உன் பக்தன். உன் சந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ எனக்கு 85க்கு மேலே  ஆயிடுத்து. மனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல் போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு அடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராஸ்தார்கிட்ட கேட்டுட்டேன். முதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு எனக்கு  போட இஷ்டமில்லைனு புரிஞ்சுது.   இவ்வளவு வயசாகியும் ஒரு  அல்ப விஷயத்துக்கு,நாக்கு ருசிக்கு,  அடிமையாய்ட்டேன். அதுக்கு தண்டனை  நீ கொடுக்கணும் னு தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கமா  விஸ்வநாதனா இருக்கே.  அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க  ஒரு  பிரதிஞை பண்றேன். இனிமே இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டு மில்லை. சக்கரை சேர்த்த எந்த பண்டமும் இந்த கை தொடாது.”   இப்படி வேண்டிண்டு கண்ணை தொடச்சுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.  நாராயணசாமி,  நீ இப்போ சொல்லு மஹா லிங்கம் நீ பண்ணின ருத்ர அபிஷேகத்தை,ஜெபத்தை   ஏத்துப்பாரா?”” மௌனம் . அனைவரும் கற்சிலையாதிக்கி வெகு நேரமாகியது.மணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லார் கண்களிலும்  அனைத்து இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் மிராஸ்தார்  அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா தான் என்னை காப்பாத்தணும் ”  என்று பெரியவா காலடியில் விழுந்தார். அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவே யில்லை. “

பெரியவா  “எல்லாரும் இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்” என்றார். எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65 வயது மதிக்கத் தக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன் வந்தார்.

“என் பேரு மகாலிங்கம் .   திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன்.   நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம் சமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போக வந்தேன்”
 கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து  அர்ச்சகர் வணங்கினார்.. அவரை தடுத்து பெரியவா
” சிவ தீக்ஷை வாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது” என்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து அர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டது. அப்போது தான் அங்கு மிராசுதார் நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார்.
” பெரியவா இவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவா தான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் ஏற்பாடு பண்ணினா” என்று அவரையும் வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார்.   நாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் ” என் பாபத்தை எப்படி கரைப்பேன். என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ” என்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். “நான் என்ன பிராயச்சித்தம் சொல்ல முடியும். தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்.” ” பெரியவா, நான் இப்பவே ஓடறேன். “அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும் என்று சொல்வாரா?” நீங்கதான் அருள் செய்யணும்”
பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார் ” உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். வெகு நேரமாகியும் பெரியவா வெளியே வரவில்லை. மிராசுதார்  ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம். அன்று காலையில் கனபாடிகள் மஹா லிங்கத்தை அடைந்துவிட்டார் என்று கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார். கனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை. கனபாடிகளின் காலை பிடித்து என்னை மன்னிச்சுடுங்கோ நான் மகாபாவி. என்று கதறினார். சுரீர் என்று அப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா ” ப்ராப்தம்” இருந்தால் என்று சொன்னாரா?
+++
 தன் பாபம் தீர நாராயணசுவாமி எண்ணற்ற மடங்களுக்கும் கோயிலுக்கும் தான தர்மங்கள் எல்லாம் செய்து கடைசியில் காசியில் முக்தியடைந்தார் என்று படித்தேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *