SRIMAD BAGAVATHAM – 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீ மத் பாகவதம். நங்கநல்லூர் J K SIVAN
10வது ஸ்காந்தம்.

ஆஹா அந்த ஏழு நாட்கள்…

”பரீக்ஷித்,உனக்கு மேற்கொண்டு உன் தாத்தாக்கள் பாண்டவர்கள், யதுகுல கிருஷ்ணன் பற்றி மேலே சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார் சுக ப்ரம்ம ரிஷி:
பரீக்ஷித் மஹாராஜா கொடுத்து வைத்தவன். சுகப்பிரம்ம ரிஷி வாயால் ஸ்ரீ கிருஷ்ணனின் சரித்திரத்தை கேட்கிறான். ஏழு நாளில் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் துளியும் கவலை இன்றி அந்த ஏழுநாளும் ஸ்ரீ க்ரிஷ்ணன் சரித்ரத்தை அன்ன ஆகாரமின்றி உபவாசத்தோடு கேட்க என்ன புண்யம் பண்ணினானோ?.

”சந்திரனுக்கு சோமன் என்று பெயர்.அவன் வம்சத்தில் வந்தவர்கள் யாதவர்கள். கிருஷ்ணன் அவதரித்த வம்சம் யாதவகுலம். யாதவ குல முரளி என்று எவ்வளவு பாட்டுகளில் பாடுகிறோம். க்ஷத்ரியர்கள் ஒன்று சூரியவம்சம் ரவிகுலம் அல்லது சந்திரகுலம் , சோம வம்சம். என்று தான் அடையாளம் கொள்வார்கள். ராமா ரவிகுல சோமா என்று ராமனை பாடுகிறோம். ராமர் சூரியவம்சம். கிருஷ்ணன் சந்திர வம்சம்.
பிருந்தாவனம் ஒரு ஆன்மீக உலகம்.கோ லோக பிருந்தாவனம், வ்ரஜ பூமி என்று அதற்கு பெயர்.

இந்த யாதவ குல கிருஷ்ணனாக பிறக்க மஹா விஷ்ணு சங்கல்பித்தார். பலராமனோடு கிருஷ்ணனும் அவதரித்த ஒரு அதிசயம் இந்த பிறவி. ஒரு பூர்ண அவதாரம். கிருஷ்ணன் விஷ்ணு தத்துவத்தின் ஆதி காரணம். கோவிந்தன் என்ற பெயர் கொண்ட தெய்வீக பிறவி. மஹாவிஷ்ணுவின் மூச்சில் தான் கோடானுகோடி ஜீவன்கள் தோன்றுகிறது. கிருஷ்ணனை விளக்கி சொல்ல ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலேயே கூட முடியாது. கிருஷ்ணனாக அவதரித்து கண்ணன் சொன்னது செய்ததெல்லாம் மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே. கிருஷ்ணனை ப்பற்றி எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும், பாடினாலும் ஏன் அலுக்கவே இல்லை.மேன்மேலும் ஆர்வம் பெருகுகிறது என்பது இதனாலேயே தான்.

‘அர்ஜுனா , என்னை விட உயர்ந்த பெரிய உண்மை எதுவும் இல்லையடா”” mattah parataram nanyat kincid asti dhananjaya: ‘என்று பகவத் கீதையை உபதேசிக்கும்போது போர்க்களத்தில் கிருஷ்ணன் எளிமையாக தான் பரமாத்மா என்பதை உணர்த்துகிறார். நமக்கும் புரியும்படியாகவே. கீதையையோ,பாகவதத்தையோ, கிருஷ்ணன் சரித்ரத்தையோ சொல்பவன், எழுதுபவன் விஷ்ணு தத்துவத்தை கொஞ்சமாவது அறிந்திருந்தால், தெரிந்திருந்தால் அவனது சொல், எழுத்து எடுபடும் . இல்லாவிட்டால் சர்க்கரை தேன் என்று ஆயிரம் பக்கம் எழுதி, நூறு நாள் சொன்னாலும் இனிக்காது.

வாழ்க்கையை வாழத்தெரியாதவன், பசுவைக் கொல்பவனுக்கு கிருஷ்ணன் புரியாது. ரசிக்காது. கிருஷ்ணன் பசு இரண்டையும் பிரிக்கமுடியாது. கிருஷ்ணனை அறியாமல் வாழ்வது தற்கொலைக்கு சமானம் என்று சொல்லலாமா? அற்புதமான இந்த மானுட வாழ்க்கையை வாழத் தெரியாதவன் தானே உயிரை மாய்த்துக்கொள்ள, தற்கொலைக்கு தயாராகிறான். மஹான்கள் கிருஷ்ணனை ஸ்மரித்து, பாடி, படித்து, பேசி, நமக்கு எத்தனையோ பேரின்ப வழிகளை காட்டி இருக்கிறார்கள். ஏன்? பவ ரோகம் எனும் இந்த பிறவிநோயினின்றும் விடுபட இது ஒன்றே வழி. ஆகவே தான் கிருஷ்ணன் கதைக்கு பவ ஒளஷதம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உலக வாழ்க்கையின் பற்றுதல்கள் விலக உதவும் மருந்து.

துருவன் தவமிருந்தான். பல வருஷங்கள் கழிந்து நாராயணன் எதிரே தோன்றினான்.
”உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் துருவா”

” பகவானே எனக்கு எல்லாம் கிடைத்து திருப்தியாக இருக்கிறேன். இந்த உலக பற்று புலன்களின் ஆதிக்கம் என்னை விட்டு அகல அருள்வாய் பரந்தாமா. அது ஒன்றே போதும்” என்றான் துருவன்.

சுகப்பிரம்ம மஹரிஷி, கிருஷ்ணனின் தாமரைப்பதங்கள் எனும் படகினால் என் தாத்தா அர்ஜுனனும் மற்றவர் களும்,குருக்ஷேத்திர யுத்தம் எனும் கடலை கடந்து அதில் எதிர்ப்பட்ட பீஷ்மர் எனும் திமிங்கிலத்தை கூட வெல்லமுடிந்தது. கடக்கமுடியாத சமுத்திரத்தை ஒரு கன்றுக்குட்டியின் குளம்பு சுவடு போன்றதாக கடக்க முடிந்தது. என் தாய் உத்தரை,
” கிருஷ்ணா நீயே கதி என்று சரணடைந்தபோது கையில் சுதர்சன சக்ரம் ஏந்தி என் தாய் கர்ப்பத்தில் குடியேறி, கிருஷ்ணன் அஸ்வத்தாமன் என்னை அழிக்க எய்த பிரம்மாஸ்திரத்தை தடுத்து என் உயிர் காத்து இந்த பாண்டவ வம்சம் அழியாமல் காத்ததை உங்கள் மூலம் அறியும் போது, விஸ்வரூபம் காட்டி இந்த உலகில் அதர்மம் நீங்க தர்மம் தழைக்க நான் வருவேன் என்ற கிருஷ்ணனிடம் என் நன்றி உணர்ச்சியை நான் எப்படி வெளிப்படுத்துவேன் ” என்று கதறுகிறான் பரீக்ஷித்

‘ கிருஷ்ணன் செயல்களை மூன்றாக பிரிக்கலாம், வ்ரஜபூமி லீலா, மதுரா லீலா, த்வாரகா லீலா. 90 அத்தியாயங்கள் இது பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் 10வது காண்டத்தில் இருக்கிறது. முதல் 4 பூமாதேவி ப்ரம்மா ஆகியோர் விஷ்ணுவிடம் முறையிடுவது, 5 முதல் 39 வரை பிருந்தாவன கிருஷ்ணன் லீலைகள். 40 வது யமுனையில் விளையாட்டு அக்ரூரர் பிரார்த்தனை பற்றி, 41லிருந்து 51 வரை மதுராவில் கிருஷ்ணன் லீலைகள், 52 முதல் 90 வரை துவாரகை மன்னன் கிருஷ்ணன் லீலைகள்.

ஹிந்துவாக பிறந்த ஒவ்வொருவனும் கிருஷ்ணனை பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.அவனது கீதோபதேசம் தெரிந்து கொள்ளவேண்டும். மாயமான இந்த உலக பொருள் தேடும் வாழ்க்கை நிரந்தரமில்லை என கீதை உணர்த்தும். மனதில் அமைதி, நிம்மதி மலரும்.

கங்கை விஷ்ணு பாதத்திலிருந்து பிறந்து மூவுலகையும் பரிசுத்தமாக்குகிறது. அதேபோல் வாசுதேவனின் கதை சொல்பவன்,கேட்பவன், நாடுபவன் ஆகியோரையெல்லாம் பரிசுத்தமாக்குகிறது.

ஒருமுறை உலகத்தில் அக்கிரமம் அதர்மம்,அநீதி, பாரம் அதிகமாகி தாங்கமுடியாமல் போனபோது பூமாதேவி பிரம்மாவிடம் குறை தீர்க்க சொல்கிறாள். அவளோடு பிரம்மாவும் ஸ்ரீமந் நாராயணனை நாடி உதவி கேட்கிறார். ” நானே அவதரிப்பேன் நீ செல்லலாம்” என்று நாராயணன் எடுத்த அவதாரங்களில் இரண்டு தான் ராமனும் கிருஷ்ணனும். கீதையில் (4.7): ”யதா யதா ஹி தர்மஸ்ய…..yada yada hi dharmasya glanir bhavati bharata abhyutthanam adharmasya tadatmanam srjamy aham , மற்றும் (4.8), பரித்ராணாய சாதூனாம்….paritranaya sadhunam vinasaya ca duskrtam. ” என்ற எல்லோரும் அறிந்த ஸ்லோகங்கள் இப்படி அவதாரம் செயது அக்கிரமங்களை அழிப்பதை பற்றி கிருஷ்ணனே சொன்னது .

கிருஷ்ணன் அவதரித்த இடம், பிறந்த நாள், பெற்றோர் என்றெல்லாம் சரித்திரம் விவரங்களைச் சொன்னாலும் கண்ணன் நம்மைப்போல் ஒரு சாதாரண மானுடன் அல்ல. சரித்திரம் சொல்லும் எத்தனையோ பெயர்களில் ஒன்று அல்ல கிருஷ்ணனின் நாமம். தான் அவதரிக்க யது வம்சத்தை தேர்ந்தெடுத்தான் கிருஷ்ணன்.
vasudeva-grhe saksad bhagavan purusah parah janisyate tat-priyartham sambhavantu sura-striyah
பரமாத்மா நாராயணன், யது வம்ச அரசன் வசுதேவன் மகனாக பிறக்க தீர்மானித்தார் இதில் இன்னொரு விஷயம், தேவகி மகனாக ஒவ்வொரு பிறவியிலும் கிருஷ்ணன் அவதரித்தார். அனந்தன் தான் சங்கர்ஷணன் எனும் பலராமன். கிருஷ்ணனுக்கு உறுதுணையாக எப்போதும் உள்ளவன். அவனும் கோலோக பிருந்தாவனத்தில் நந்தகோபன் இல்லத்தில் கிருஷ்ணனின் அண்ணனாக வளர்கிறான். யோகமாயையும் விஷ்ணு மாயாவியான கிருஷ்ணன் சகோதரியாக அவதரிக்கிறாள்.

யதுகுல மன்னன் சூரசேனன் மதுராபுரியை தலைநகராக கொண்டு ஆள்கிறான். மதுராபுரி ராஜ்யத்தின் ஒரு பகுதி பிருந்தாவனம். ரெண்டுமே கிருஷ்ணன் வாழ்ந்த இடம். (vrndavanam parityajya padam ekam na gacchati). இன்றும் உள்ளவை. வ்ரஜபூமி எனப்படுவது. ராஜ வம்சத்தில் பிறந்த வசுதேவன் தேவகியை மணந்து கொள்கிறான். தேவகியின் சகோதரன் கம்சன். ராஜா உக்கிரசேனனின் மகன். கம்சன் தனது அன்பு சகோதரி தேவகி திருமணத்தை கோலாகலமாக நடத்தி அவளையும் வசுதேவனையும் தேரில் அமர்த்தி தானே தேரை ஓட்டி மதுராபுரியில் ஊர்வலம் அழைத்து போகிறான்.
ugrasena-sutah kamsah svasuh priya-cikirsaya rasmin hayanam jagraha raukmai ratha-satair vrtah
அந்த அழகிய தேரைச்சுற்றிலும் நூற்றுக்கணக்கான தங்கத்தேர்கள் அழகிய உயர்ந்த ஜாதி குதிரைகள் பூட்டி பவனி வருகிறது.
catuh-satam paribarham gajanam hema-malinam asvanam ayutam sardham rathanam ca tri-sat-satam dasinam sukumarinam dve sate samalankrte duhitre devakah pradad yane duhitr-vatsalah
தேவகியின் தந்தை தேவக ராஜன் அவள் மீது பாசமிக்கவன். பெண்ணுக்கு 400 யானைகள், 10000 குதிரைகள், 1800 தங்கத்தேர்கள், 200 பணிப்பெண்கள் ஸ்ரீ தனமாக பரிசாக கொடுக்கிறான்.

”ஹே பரீக்ஷித் மஹாராஜனே, அப்புறம் அங்கே நடந்ததை சொல்கிறேன் கேள். மணப்பெண் தேவகி, மாப்பிள்ளை வசுதேவன் இருவரையும் அலங்கரித்த தங்கத்தேரில் வைத்து கம்சன் ஓட்டிச்செல்ல ஊர்வலம் போகிறது. வாணவேடிக்கைகள், சங்க நாதம் வாத்ய ஒலிகள், மேள தாளங்கள், நாட்டிய மங்கைகள் ஆட அற்புதமான ஊர்வலம்.
pathi pragrahinam kamsam abhasyahasarira-vak asyas tvam astamo garbho hanta yam vahase ‘budha
அந்த நேரம் பார்த்து வானத்தில் ஒரு அசரீரி கேட்கிறது.கம்சனின் காதில் நேராக விழுகிறது. என்ன சொல்லிற்று அந்த அசரீரி:
“அடே, அடிமுட்டாளே கம்சா, நீ அழகாக ஊர்வலம் அழைத்துப் போகிறாயே அந்த பெண்ணின் எட்டாவது குழந்தை தான் உன் உயிருக்கு உலை வைக்கப்போகிறது ”
இதைக் கேட்ட கம்சன் திகைக்கிறான். உடல் வியர்வையால் குணமாகிறது. இடி விழுந்தது போல் .ஆகிவிட்டது அவனுக்கு. இனம் புரியாத பயம் ஒன்று அவனுள்ளே புகுந்தது. அவன் எதிர்கால கனவெல்லாம் தவிடுபொடியாகப்போகிறதோ? சகோதரி தேவகி மேல் அதீத அன்புடையவன் கம்சன். இருந்தபோதிலும் அவன் உயிருக்கே ஆபத்து அவள் குழந்தை ஒன்றினால் , அதுவும் எட்டாவதால் என்று அறிந்தவுடன் கடுங்கோபம் அடைகிறான்.

மரீசி ஒரு சாபம் பெற்றதால் அவருடைய ஆறு குழந்தைகள் பிறந்ததும் இறந்து சாபம் தீரவேண்டும். அதற்காக அவை தேவகியின் கர்ப்பத்தில் பிறக்கின்றன. கம்சனால் இறந்தவுடன் கொல்லப்படுகின்றன. தேவகிக்கு தன் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் என்று தெரிந்ததும் தவிக்கிறாள்.அதே சமயம் ஸ்ரீமன் நாராயணனே தன் வயிற்றில் உதிக்கப்போகிறான் என்று உணர்ந்து பெரு மகிழ்ச்சி எய்துகிறாள்.

தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *