PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN
கார்கோடகன் தெரியுமா?

கார்கோடகன் என்றால்  பாம்பு என்ற அளவில் தெரிந்தாலே  பாஸ் மார்க். நளோபாக்யானத்தில் வருபவன் என்ற அளவுக்கு தெரிந்தால்   நூற்றுக்கு  70 மார்க்கு கூட  கொடுப்பேன்.  இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள  இந்த பதிவு. என் நெருங்கிய உறவினர்   திரிசக்தி  சுந்தரராமன் அரசியல் என்ற  தனது பத்திரிகையில்   கார்கோடன் என்ற பெயரில்  அஸாத்யமாக எழுதுபவர். அவர் எழுத்தில்  கார்கோடகனின் விஷமும் அவருடைய விசேஷ விஷமமும் கலந்து படிக்க அற்புதமாக இருக்கும்.
பாண்டவர் வம்ச  ராஜா பரீக்ஷித்  ரிஷி  சாபத்தால் பாம்பு கடித்து இறக்க, அவன்  மகன் ஜெனமேஜயன் கால சர்ப்ப யாகம்  பண்ணி பூலோகத்தில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த யாகத்தீயில் பொசுங்க செய்தான்.  கார்கோடன் நாக ராஜா.  அவன் நேரே ஒரு சிவன்  ஆலயத்துக்கு வந்து சிவா என்னை காப்பாற்று என்றான்.   சிவன் காப்பாற்றினார். அந்த  ஆலயம் தான் காமரசவல்லி  சமேத கார்கோடேஸ்வரர்  ஆலயம்.   இங்கே வந்து சிவ தரிசனம் பண்ணினாள்  பாம்பு கடித்து மரணம் கிடையாது.  சர்ப்ப  தோஷம் தீண்டாது.  நீ வா என்று சிவன் கார்கோடகனை அழைத்து தனது கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.   மன்மதனை இழந்த ரதி  தவம் செய்து அவளுக்கு மாங்கல்யபிச்சை அளித்தார் என்பதால்  இந்த க்ஷேத்ரம்  ‘ரதிவரம்’ என்ற  பெயர் பெற்றது.  காலப்போக்கில்  இந்த ஊர் கார்கோடீஸ்வரம், ரதிவரம் என்ற பெயர்கள் மறந்து போய்  இப்போது காமரசவல்லி என்று அறியப்படுகிறது. அம்பாள்  பாலாம்பிகை.  தனி சந்நிதி.  இந்த ஊர்  திருவையாறில் உள்ள திருமானூர், ஏலக்குறிச்சிக்கு அருகில்  உள்ளது.

இன்னொரு கார்கோடகன் சம்பந்தப்பட்ட ஊர்  கோடக நல்லூர்.  திருநெல்வேலியிலிருந்து 10கி.மீ. தூரம்.  நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி – முக்கூடல் செல்லும்  மார்க்கத்தில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரே  ஒரு  கி.மீ. நடந்தால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். ஆதிசங்கரர்  இந்த க்ஷேத்ரத்தை  தக்ஷிண ஸ்ரிங்கேரி என்கிறார்.  தாமிரபரணி அவருக்கே  தக்ஷிண கங்கை என்று தான் பெயர்.
கார்கோடகன் நாகம் வசித்த  காட்டில்  ஒரு நாள்  பெரிய  காட்டுத் தீ.  அப்போது அந்த பக்கமாகநலன்  சோர்ந்து போய் வந்தான். பாவம்.  சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நளன் சோகமாக நடந்து வந்தான். துன்பத்தில் இருப்பவன் தான் இன்னொருவன் துன்பத்தை உணர்வான் அல்லவா?  பாவம்  கார்கோடகன்  தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்து  கார்கோடகன் உயிரை நளன் காப்பாற்றினான்.
”நளா, என்னை நீ காப்பாற்றினாய். நான் உன்னைத்  தீண்டி உன்னை உருமாற்றுகிறேன்.  இனி உன் பழைய உருவம் எவருக்கும் தெரியாது.  பின்னால் நீ  விரும்பியபோது பழைய உருவம் பெறுவாய். சுபிக்ஷமாக இருப்பாய். என்று நன்றியோடு சொன்னான் கார்கோடகன்.   நளோபாக்யானம் இங்கே எழுத முற்பட்டால் எதை எழுத விரும்பினேனோ அது முடியாது. ஆகவே  நள சரிதத்தை  இதோடு  விடுகிறேன்.
பரி‌ஷத் மகாராஜாவையும், நளனையும் தீண்டிய தற்கு பரிகாரமாக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகாவிஷ்ணுவை வேண்ட அவர்  ‘  நீ கோடகநல்லூருக்கு சென்று வழிபட்டு வா. அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று கூறினதால்  தான் கார்கோடன் இங்கே வந்தான்.
கார்கோடகன் பற்றி மஹா பெரியவா விஷயம் ஒன்று அற்புதமாக  இருக்கிறது.அதைச் சொல்லதான் கார்கோடகன் பற்றி முதலில் விவரம் தந்தேன். 

காஞ்சி மடத்திற்கு  வெளி மாநிலத்திலிருந்து  ஒரு பக்தர்  மஹா பெரியவா தரிசனம் பெற வந்தார்.  அவர் அதிர்ஷ்டம்  மஹா பெரியவா அன்று மௌன விரதத்தில் இல்லை.  கூட்டமும் அதிகம் இல்லை. பேசமுடிந்தது.   பேச்சு வாக்கில் அந்த பக்தர்   வேறு யாரைப் பற்றியோ குறை சொன்னார்.  ”பெரியவா  அந்த சுப்புணி  ஒரு கார்கோடகன் ”  திருமயம் ஸ்டேஷன் எங்கே இருக்குன்னு கேட்டேன்.  தெரிஞ்சுண்டே, அங்கேயே அவன் இறங்கியிருக்கான். ஆனால்  என்  கிட்டே ” தெரியாது”ன்னு   பொய் சொல்லி இருக்கான்.  சரியான  கார்கோடகன் அவன்”  என்று சொல்லிக்கொண்டு வந்தார்.  பேசாமல்  அந்த பக்தரையே  பார்த்துக் கொண்டிருந்த மஹா பெரியவா  புன்சிரிப்போடு :”நீ என்ன சொல்றே ? சுப்புணிக்கிறவன்  ‘ரொம்ப  நல்லவன்னு சொல்ல வந்தியா?”” இல்லே  பெரியவா,  நான்  அந்த சுப்புணிக்கிறவன்   ஒரு  கெட்ட விஷப்பாம்புனு  சொல்ல வந்தேன். கார்கோடக   நாக சர்ப்பம் அவன். இல்லேன்னா என்னை எதுக்கு ஏமாத்தணும். நான் ஒவ்வொரு ஸ்டேஷன் பேரா பாத்துண்டே வந்து திருமயம்னு பார்த்து அங்கே இறங்கினேன். ”
”ஓஹோ , அப்படியா,  சரி  உனக்கு  ப்ராத  ஸ்மரண  ஸ்லோகம் தெரியுமோ?
”தெரியும்  பெரியவா.”எங்கே சொல்லு?கார்கோடகஸ்ய நாகஸ்ய  தமயந்திய நலஸ்ய  ச :  ரிதுபர்ணஸ்ய ராஜரிஷே: கீர்த்தனம் கலி நாஸனம் : Karkotakasya nagasya dhamayanthya nalasya cha I Rithuparnasya rajarshe : keerthanam kalinashanam II
”நீ  சொன்னதுக்கு  என்ன அர்த்தம் தெரியுமா?””பெரியவா நீங்களே  சொல்லுங்கோ” என்று கைகட்டி நமஸ்கரித்தார் அந்த பக்தர்.”கார்கோடகன், நளன் , தமயந்தி, ரித்து பர்ண மஹாராஜா, இவாளைப் பற்றி எப்போ நினைக்கிறாயோ, உன் சகல பாபங்களும்  அழியும்” என்கிறது இந்த ஸ்லோகம். கார்கோடகன், நளன் , தமயந்தி, ரிதுபர்ணன், எல்லாருமே  புண்யவான்கள்”அந்த பக்தருக்கு  ரொம்ப வெட்கமாக போய்விட்டது. யாரோ சுப்புணியைப் பற்றி குறைகூறும் போது கார்கோடகனைப்  பற்றி தவறாக  எடை போட்டுவிட்டோமே என்று  வருந்தினார். அதனால் தான்  மஹா பெரியவா அந்த  சுப்புணியை  கார்கோடகன்நு  சொன்னதுக்கு    ‘ரொம்ப நல்லவனா;  என்று சிரித்துக் கொண்டே   கேட்டிருக்கிறார். பெரியவா கடைசியில்  அந்த பண்டித பக்தரிடம்… ” உன்னை  இது தான் திருமயம். இறங்கு”ன்னு  இருட்டிலே  வேறே ஒரு ஸ்டேஷனிலே இறங்க விடாமே   ”எனக்கு தெரியாது” என்று சொன்னதே   பெரிய உதவி இல்லையா. என்று சிரித்துக் கொண்டே கேட்டார். எதிலும் நல்லதையே  காணும் மஹா பெரியவாவின் குணம் ஆயிரத்தில் அல்ல  கோடியில் ஒன்றாவது நமக்கும் வரவேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *