MATHRU PANCHAKAM – J K SIVAN

மாத்ரு பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

அம்மா என்று நினைக்காத…..

இன்று அம்மாக்கள் தினம். வருஷத்தில் ஒருநாளை அம்மாவுக்கு ஒதுக்கி, அன்று அம்மாவை நினைப்பதோ, நன்றி சொல்வதோ போதவே போதாது. அம்மா ஒவ்வொரு கணமும் நினைவில் இருக்கவேண்டியவள். தெய்வத்தை இன்ஸ்டால்மென்டிலா வணங்குவோம்? மாதா முதல் தெய்வம்.

என் நான்கு வயது பேத்தி மாயா என் MOBILE போனைப் பார்த்துவிட்டால் எனக்கு ஆபத்து. அவளுக்கு யூட்யூபில் குழந்தைகள் வீடியோ பார்க்க தெரியும். மொபைல் காமெராவில் எதைப்பார்த்தாலும் போட்டோ எடுப்பாள். அதால் ஆபத்தில்லை. நல்லவேளை எதையும் அழிக்க இன்னும் தெரியாது. என் நண்பர்கள் நம்பர்களை அழுத்தி யார் யாரையெல்லாமோ போனில் கூப்பிடுவாள். எனக்கு என்ன ஆயிற்று என்று அவர்கள் கேட்கும்போது எனக்கு பதில் சொல்லி கட்டு பிடியாகாது. நெளிவேன்.

மாயா தானாகவே சில பள்ளிக்கூட ரைம் RHYME களை டான்ஸ் ஆடிக்கொண்டே பாடுவாள். ஒன்று இது:

‘ அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா….” குழந்தைகளுக்கு அம்மா தெய்வம். இன்றியமையாத ஜீவன். நல்லவேளை இப்போதிருக்கும் நிலையில் வருஷத்தில் ஒரு நாளாவது அம்மாவை நினைக்க பலருக்கு, தோன்றியதற்கு கிருஷ்ணா உனக்கு ஆயிரம் நமஸ்காரம்.

‘ ஹே வெள்ளைக்காரா, அம்மாவைப் பற்றி நினைக்க வருஷத்தில் ஒரு நாள் அவளுக்கு ஒதுக்கிய நீ சத் புத்ரன். வீட்டிலேயே இருந்தும், ஊரில் இருந்தும், உயிரோடு இருந்தும் அம்மா ஞாபகம் இல்லாத எங்களவர்களை விட நீ உயர்ந்தவன்.

அம்மா” — இந்த வார்த்தைக்கு மிஞ்சிய சக்தி வாய்ந்த ஒரு சக்தி வாய்ந்த சொல் தமிழில் கிடையாது. அம்மா ஸ்தானத்தில் இருக்கும் ராஜாவின் அம்மாவும் பிச்சைக்காரன் அம்மாவும் ஒரே நிலைப்பாடு தான். உலகில் முதன்மையானவள் ப்ரத்யக்ஷ தெய்வம் அவள். மாத்ரு தேவோ பவ : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்: தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை….. இன்னும் நிறைய….மாதா, பிதா, குரு தெய்வம் என்று முன்னிலையில் இருப்பவள்.

இன்று என் அம்மாவைப் பற்றி சில வரிகள் எழுதி நிறைய பேருக்கு பிடித்து அவர்கள் அம்மா பற்றி நினைக்க தோன்றினால் அது நான் செய்த புண்யம். அடிக்கடி என் அம்மா ஜம்பாவதியைப் போற்றி நினைவில் இருப்பதை எழுத தவறுவதில்லை.

”அம்மாவைப் பற்றி எழுதினால் யாருக்கு தான் பிடிக்காது. எத்தனை தரம் படித்தாலும் விருப்பும் விறுவிறுப்பும் பாசமும் பழைய ஞாபகமும் குறையுமா?. நமக்கு மட்டுமல்ல ஆதி சங்கரர் போன்ற முற்றும் துறந்த சந்நியாசிக்கு கூட அம்மாவை ரொம்ப பிடித்தது. அவருடைய மாத்ரு பஞ்சகம் என்ற ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் ஐந்து யுகங்களிலும் அழியாத ஒன்று . அதையே மீண்டும் சொல்கிறேன்.

ஒரு அறிவிப்பு. இந்த மாத்ரு பஞ்சகம் எழுதும்போது எனக்கு எப்போதும் கண் தெரியாமல் போகிறது. காரணம். கண்ணீர் திரையாக மறைப்பதால். நீங்களும் படிக்கும்போது குருடர்களாவீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். இதோ படியுங்கள்:
++
”அம்மா எனக்கு சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப விருப்பமாக இருக்கிறதே”
‘ என் கண்ணே, சங்கரா, எனக்கு இருப்பது நீ ஒருவனே. உன் தகப்பனாரும் என்னை விட்டுச் சென்று விட்டார். பல வருஷம் தவமிருந்து திரிஸூர் வடக்கு நாதன் அருளால் நீ பிறந்தாய். கண்ணை இமை காப்பது போல் உன்னை வளர்த்தது நீயும் என்னை விட்டுபிரிந்து போவதற்காகவா? இதற்கா பெற்றேன். நீ சந்நியாசியாவது நான் உன்னை உயிருடன் இழப்பதற் கல்லவோ சமமாகும்?
‘என் அருமை அம்மா, நீ தாய் என்பதோ நான் ஒரு நேரத்தில் உன் மகன் என்பதோ பிரிபடும் உறவோ? உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் நாம் இதயத்தில் ஒன்றாகவே தானே இருப்போம். உன் மனத்தில் இருக்கும் அந்த இறைவன் தான் என் மனத்திலும் இருப்பவன் அல்லவா? நான் எங்கிருந்தாலும் நீ தான் என் மனதில் முழுவதுமாக இருப்பாய்”.
எப்படியோ மகன் தாயின் அனுமதியை பெற்று விட்டு ஒரு நிபந்தனையுடன் சன்னியாசி யானான் 7 வய து மகன் சங்கரன்..
”சங்கரா, என் குழந்தே, எனக்கு நீ ஒரு வாக்கு கொடுப்பாயா.
‘சரிம்மா, சொல்லு”
” நீ என் மரணத் தருவாயில் என் அருகில் இருக்க வேண்டும். உன் கையால் தான் எனக்கு தகனம். நீ அதைச் செய்வாயா? சரி என்றால் நீ என்னை விட்டு செல்லலாம் ”.
”நிச்சயம் அம்மா, அப்படியே ஆகட்டும்.
வருஷங்கள் உருண்டது. அந்த சந்நியாசி ஸ்ரிங்கேரியில் இருக்கும்போது அன்னையின் அந்திம காலம் வந்ததை உணர்ந்தார். திரிகாலமும் உணரும் ஞானி அல்லவா அவர். அம்மாவுக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது.

இறைவன் அருள் மிக்க அந்த ஞானி அடுத்த கணமே அன்னையிருந்த ஊர் கேரள தேச காலடி கிராமத்தில் தாயின் காலடியில் வணங்கி அருகே அமர்ந்தார். மடியில் இருத்திக்கொண்ட அம்மாவின் கண்கள் மட்டுமே பேசின. கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவின் உடல் ஒவ்வொன்றாக சக்தியை இழந்து வந்தது. நினைவு தப்பியது. சிறிது நிமிஷங்கள் கசிந்தது. மரணம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது. தாய் வெறும் மரக்கட்டை, உடலானதை உணர்ந்த அந்த துறவி, அவளுக்கு அந்திம கடன்களை ஆசாரத்தோடு சாஸ்த்ரோக்தமாக செய்தார். எப்படி? ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே. துறவிக்கு ஏது உறவு?” என்று எல்லோரும் எள்ளி நகையாடினர்.

துறவியின் மனத்திலிருந்து, எண்ணக் குவியல்களிலிருந்து வெடித்து வாய் வழியே கடல் மடையென ஐந்து ஸ்லோகங்கள் அப்போது வெளியேறியது . அந்த ஞானியின் மற்ற காவியங்களிலிருந்து முற்றிலும் அப்பாற்பட்ட ஒன்றே ஒன்று. இதில் தாய்ப் பாச உணர்ச்சி பொங்கும். உறவும் நினைவும் தொக்கி நிற்கும். அதுவே இன்றும் என்றும் அழியாத காவியமாக இருப்பதைப் பார்க்கலாமா? .

தாயைக் கடவுளாகவே போற்றுவதும் கடவுளைத் தாயாக நெருங்குவதும் நாம் அறிந்தது தான். உலகியலில் ஒரு தாய்க்கு தான் மகனாகப் பணி புரியவில்லையே என்ற ஏக்கம் எத்தனை மகன்களுக்கு தோன்றுகிறது?. முக்கியமாக அவள் இருக்கும்போது. மனச் சாட்சியின் உறுத்தல் அடிக்கடி நெருடும்.

आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी । एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः दातुं निष्कृतिमुन्नतोऽपि तनयस्तस्यै जनन्यै नमः ॥ १॥

1. AASTAAM TAAVADIYAM PRASOOTISAMAYE DURVAARASHOOLAVYATHA NAIRUCHYAM TANUSHOSHANAM MALAMAYEE
SHAYYAA CHA SAAMVATSAREY EKASYAPI NA GARBHAAR BHARAN KLESHASYA YASYA(a)KSHAMO DAATUM NISHKRUTIMUNNATO(a)PI TANAYAHA TASYAI JANANYAI NAMAHA

”ஆஸ்தம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம : தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

என் அம்மா! என் தலை உன்னிலிருந்து வெளிப்படும் போது என்னமாக பல்லைக் கடித்துக்கொண்டு தாங்க முடியாத பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில் வெளியே தள்ளினாய் , வருஷக் கணக்காய் உன் அருகே படுத்து உன் ஆடையை, படுக்கையை தாராளமாக நிறைய ஈரமாக்கி நனைத்தேனே. ஒரு வார்த்தை நீ கோவித்த தில்லையே . மாறாக சிரித்து என்னை அணைத்தாய்.

என்னால் உன் உடல் இளைத்தது, சக்தி இழந்தது. பல இடங்களில் வலி கண்டது. ஒரு பத்து மாச காலம் என்னமாய் நான் உன்னை படாத பாடு படுத்தினேன். இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்.உலகம் என்னை பெரிய ஞானி என்று புகழ்வதால் அது ஈடாகுமா?

गुरुकुलमुपसृत्य स्वप्नकाले तु दृष्ट्वा यतिसमुचितवेशं प्रारुदो मां त्वमुच्चैः ।गुरुकुलमथ सर्वं प्रारुदत्ते समक्षं सपदि चरणयोस्ते मातरस्तु प्रणामः ॥ २॥

GURUKULAMUPSRUTYA SVAPNAKAALE TU DHRUSHTVAA YATI SAMUCHITH VESHAM PRARUDO MAAM TVAMUCCHAIHI
GURUKULAMATH SARVAM PRARUDHATTHE SAMASKSHAM SAPADHI CHARANYOSTEY MAATURASTU PRANAMAHA

”குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம் ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

என் அம்ம்மா!! திடீரென்று ஒருநாள் நான் காவி உடுத்திக்கொண்டதாக கனவு கண்டாய். அது எவ்வாறு உன்னை உலுக்கியது. கண்ணீர் கங்கையாய் பெருக ஓட்டமும் நடையுமாக அலறி அடித்துக்கொண்டு என் குருகுல வாச ஆசான் வீட்டுக்கு ஓடிவந்தாய்.என்னைத் தேடினாய், நான் உடுத்திக்கொண்டிருந்த என்இடுப்புத் துண்டை தான் முதலில் கவனித்தாய். வெள்ளையாக தான் இருந்தது. ‘அப்பாடா சங்கரன் சன்யாசியில்லை…..காவி இல்லை… ஆஹா நிம்மதியாக என்னைக் கட்டிக்கொண்டாய் .உச்சி முதல் பாதம் வரை நீ தடவிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறதே. என்னோடு படிக்கும் மற்ற பையன்களும் என் ஆசானும் கூட உன்னோடு சேர்ந்து அழுதது இப்போது நடந்தது போல் இருக்கிறதே. நான் என்ன செய்யமுடியும்?. பேசாமல் உன் காலில் விழுகிறேன். மனப்பூர்வமாக வணங்குகிறேன்.

अंबेति तातेति शिवेति तस्मिन् प्रसूतिकाले यदवोच उच्चैः । कृष्णेति गोविन्द हरे मुकुन्द इति जनन्यै अहो रचितोऽयमञ्जलिः ॥ ५॥
aṁbeti tāteti śiveti tasmin prasūtikāle yadavoca ucaiḥ kṛṣṇeti govinda haremukundeti aho jananyai racitoyamañjaliḥ|3|”

‘அம்பேதி தாதேதி சிவேதி தஸமின் ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே – த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

ஒ ! என் அம்ம்மா ! உனக்கு ப்ரஸவ வலியெடுத்த போது நீ என்ன கத்து கத்தினாய் ஞாபக மிருக்கிறதா? ” அப்பா, அம்மா ! தேவாதி தேவா, பரம சிவா, தெய்வமே கிருஷ்ணா, கோவிந்தா, ஸ்ரீ ஹரி, பகவானே, முகுந்தா ”

அதற்கு ஈடாக நான் இப்போது என்ன செய்யப்போகிறேன் தெரியுமா ? என் அன்புள்ள அம்மா, பணிவோடு கண்ணீர் மல்க உன் காலில் விழப்போகிறேன்.

न दत्तं मातस्ते मरणसमये तोयमपिवा स्वधा वा नो दत्ता मरणदिवसे श्राद्धविधिना । न जप्त्वा मातस्ते मरणसमये तारकमनु- रकाले सम्प्राप्ते मयि कुरु दयां मातुरतुलाम् ॥ ३॥

3. NA DATTAM MAATASTAE MARANASAMAYAE TOYAMAPI VAA SVADHAA VAA NO DAEYAA MARANDIVASAE SHRAADDHAVIDHINAA
NA JAPTO MAATASTAE MARANASAMAYAE TAARAKAMANUHU AKAALAE SAMPRAAPTE MAYI KURU DAYAAM MAATARATULAAM

”ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு: அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

என் தாயே, உனக்கு நான் என்னவெல்லாம் செய்யவில்லை தெரியுமா? தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட தரவில்லை. உன் கடைசி யாத்திரைக்கு உபகாரமாக ஒரு விரலைக்கூட அசைக்க வில்லை. கடமை என்று ஒன்று இருந்ததா எனக்கு? போனதெல்லாம் போகட்டும் உனக்கு நினைவு அழியுமுன்னே அந்த அந்திம நேரத்தில் உன் காதில் ”ஒ ராமா, ஸ்ரீ ராமா — என்று ஏதாவது ஒரு வார்த்தையாவது சொல்ல நான் இருந்தேனா? ஈடற்ற, இணை கூற முடியாத தாயே, இரக்கமற்ற என் மேல் கொஞ்சூண்டு இரக்கம் வை. என் தவறையெல்லாம் மறந்துவிடு, மன்னித்து விடு. ஏதோ கடைசி கடைசியாக வாவது உன் உயிர் பிரியும் சற்று நேரத்திற்கு முன்பாவது வந்தேனே. முடிந்ததைத் செய்தேனே. அதற்காகவாவது கருணை காட்டு..

मुक्तामणि त्वं नयनं ममेति राजेति जीवेति चिर सुत त्वम् ।इत्युक्तवत्यास्तव वाचि मातः ददाम्यहं तण्डुलमेव शुष्कम् ॥ ४॥

MUKTAMANISTVAM NAYANAM MAMAETI RAAJAETI JEEVAETI CHIRAM SUTA TVAM ITYUKTAVATYAASTAVA VAACHI MAATAHA
DADAAMYAHAM TANDULAMAESHA SHUSHKAM

”முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத: ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

அம்மா, நீ நீடூழி வாழ்க. ” என் முத்தே, என் நவ நிதியே, என் கண்ணின் கருமணியே, என் ராஜா குட்டி, என்உயிரின் உயிரே,” என்றெல்லாம் இட்டுக்கட்டி நீயாக ராகம் போட்டு என்னை தூக்கிக் கொண்டு ஆடி, மடியில் வைத்து கொஞ்சி பாடுவாயே, நான் நன்றிக்கடனாக இப்போது உனக்கு என்ன செய்கிறேன்?. அன்பின் ஈரத்தோடு, பாசத்தின் பனித்துளி யோடு, கருணையின் குளிர்ச்சியோடு நீ பாடிய அந்த வாய்க்கு ஈரமில்லாமல் வறண்ட உலர்ந்த அரிசியைத்தான் கொஞ்சம் வாய்க்கரிசியாக போடுகிறேன்.

அந்த ஞானி, முற்றும் துறந்த துறவி, உலகம் போற்றும் அரிய அத்வைத முனி, ஆதி சங்கரர். இந்த ஐந்து ஸ்லோகமும் அவர் தாய் ஆர்யாம்பாவுக்குகொடுத்த வாக்கினைக் காப்பாற்ற காலடிக்கு வந்து அவளது அந்திம கிரியைகளை செய்யும்போது பாடிய ” மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள் மேலே சொன்னவை.

தாய் தந்தையைப் பேண தவறவேண்டாம். காலம் கடந்து சங்கரர் போல் துடிக்க வேண்டாமே. அவர் சன்யாசி அதனால் ஒப்புக்கொள்ளலாம். நமக்கு மன்னிப்பே கிடையாது. உலகத்தில் எங்கெங்கோ ஏதேதோ காரணத்தால் நகர முடியாமல் தவிக்கும் அம்மாவைக் காண துடிக்கின்ற, காண இயலாமல் தவிக்கும் அன்பு உள்ளங்களே பகவான் கிருஷ்ணன் உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கட்டும். விரைவில் அம்மாவைப் பார்த்து ஆசி பெற சந்தர்ப்பம் கிடைக்கும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *