GOPALA KRISHNA BHARATHI – J K SIVAN

கோபாலகிருஷ்ண பாரதி  –  நங்கநல்லூர்  J K  SIVAN

தமிழில் அற்புதமாக, பக்தி தோய்ந்த, எளிய,  இனிய  சந்தம் மிகுந்த,  கேட்டாலே  தலை, கை  உடல்  ஆடவைக்கும்,  மனம் கவரும்  பாடல்களை பலர்  தந்திருக்கிறார்கள்.  அவர்களில் சிலர்  பாரதி என்ற  பெயர் கொண்டவராகில். என்னால் மறக்க முடியாத  பாரதிகள், சுப்ரமணிய பாரதி, கோபாலகிருஷ்ண பாரதி,  சுத்தானந்த பாரதி  என் தாத்தா  வசிஷ்ட பாரதி.   தாத்தா  வசிஷ்ட பாரதி பற்றி அடிக்கடி எழுதுகிறேன். அமர கவி பாரதி  என்றும் நெஞ்சில் நிறைந்து அடிக்கடி என்னை எழுத  வைப்பவர். சுத்தானந்த பாரதி பற்றி அதிகம் தெரியாது. விஷயம் தேடி எழுத வேண்டும்.   கோபாலகிருஷ்ண பாரதி அற்புதமான மனிதர்  250 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த சிவ பக்தர். நந்தனார் சரித்திரத்தை நமக்கு  நாடகக் கவிகளாக அளித்தவர்.  பக்திக்கும்  பகவான் அருள்  கிடைக்கவும் சிறந்த   இலக்கண  ஞானம், கல்வி அறிவு  வேண்டாம். பக்தி  நெஞ்சில் ஆழப்பதிந்திருந்தால்  அது தானே வேர் விட்டு வளர்ந்து வெளிவரும், மலரும். மயக்கும்.   அப்படி ஒருவர்  தான்  சிதம்பரம் கோபாலகிருஷ்ண பாரதியார். 86 வயது வாழ்ந்தவர்  1810-1896.

நாகபட்டினத்துக்கு பக்கத்தில் நரிமணம் கிராமத்தில்  இப்போது  பூமியை தோண்டி பாதாளத்திலிருந்து எரிவாயு எடுப்பதாக  அறிகிறோம்.  அங்கே கிடைத்த  ஒரு  விலை மதிப்பிடமுடியாத ஒரு புதையல்   கோபாலகிருஷ்ண பாரதி.

சிவராம பாரதியார்  சங்கீத  உபன்யாசகர்,ப்ரவசன கர்த்தா  பிழைப்புக்காக   நரிமணம் , முடிகொண்டான்,  ஆனை தாண்டவபுரம், மாயூரம் என்று பல இடங்களில் குடும்பத்தை  இடம் மாற்றி வாழ்ந்தவர்.  சிவராம பாரதியின்  மகன். கோபாலக்ரிஷ்ணன்.    தந்தையிடம்  ஐந்து வயதில் சங்கீதம் கற்றார்.  அக்கால  பிரபல சங்கீத வித்வான்களில் ஒருவர் கனம் கிருஷ்ணய்யர். (கனம்  என்றால்  குண்டான, இல்லை. அடிவயிற்றிலிருந்து ஸ்வரம் எழுப்பி உதடு அசையாமல் பாடுவது. அசுர சாதகம் செய்தால் தான் இது முடியும். இவரைப்பற்றி எழுதி இருக்கிறேன். தமிழ் தாத்தா  உ.வே.சா.வின்   உறவினர்.  கனம்  பாடுவதில்  கிருஷ்ணய்யர்  நிபுணர் என்பதால்  ”கனம்  கிருஷ்ணய்யர்”என்ற  விருது. கனம் கிருஷ்ணய்யர், மற்றும் ஹிந்துஸ்தானி உஸ்தாத் ராமதாஸ் ஆகியோரிடம்   கோபாலக்ரிஷ்ணன்  சிஷ்யனாக சேர்ந்து கர்நாடக சங்கீதம் ஹிந்துஸ்தானி எல்லாம் கற்றுக் கொண்டான் . இது தவிர மாயூரத்தில் கோவிந்த யதி என்பவரிடம் வேதங்கள்  கற்றான்.

கிராமங்களில் அப்போது இங்கிலிஷ் வந்து நம்மை குட்டிச் சுவராக்க வில்லை.  கோபாலகிருஷ்ண பாரதி  பிரம்மச்சாரி.  யோக பயிற்சி உண்டு.  அறுபத் திமூவரில்  ஒருவரான  திருநாளைப் போவார் என்ற நாயனாரின் சரித்திரத்தை  நந்தனார் சரித்திரம் என்று எழுதியது உலகப்புகழ் பெற்ற  பாடல் திரட்டு.   கோபாலகிருஷ்ண பாரதி  பரம்பரையாக  கதா காலக்ஷேப ஞானம் உடையவர் என்பதால்  தனது  நந்தனார் சரித்திர சங்கீத நாடகத்தை  ஊர் ஊரக சென்று பாடி உபன்யாசம் செய்தார்.   இன்றும்  நந்தனார் சரித்திர பாடல்கள் மேடைகளில் ஒலிக்கிறது. சுருக்கமாக நந்தனார் கதை சொல்கிறேன்.

நந்தனார் ஒரு தாழ்ந்த, தீண்டத்தகாத குலத்தவர் என சமூகம் ஒதுக்கி வைத்த காலம்.  ஏழை விவசாயி. சிதம்பர நடராஜன் மேல் உயிர். ஆனால் ஆலயப்பிரவேசம் பண்ண வாய்ப்பில்லை. தூர நின்றே வெளியே இருந்து தரிசனம் பண்ணவேண்டும்   என்ற  வாழ்க்கை  லக்ஷியம். நிறைவேறுமா?   விவசாயியின் எஜமான் பண்ணையார் ஒரு ஈவிரக்கமில்லாத வேதியர் . இது கதையில் தான்.  அறுபத்து மூன்று   நாயனார்கள் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற  திருநாளைப்போவார் சரித்திரத்தில்  பண்ணையார் என்கிற வேதியர் பாத்திரம்  இல்லை.  நாயனார் எந்த  பண்ணை யாரிடமும் சேவகம் பண்ணியதில்லை.  தத்தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாசனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் ”துடவை”   என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை  திருநாளைப்போவாரும்  பெற்றுத் தம் சொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணம்  சொல்கிறது. பிறந்தது   முதல் சிவ சிந்தனை தவிர வேறே  கிடையாது  என  சேக்கிழார் பாடுகிறார்.   க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்து  வந்ததாகத்தான் பெரிய புராணம் சொல்கிறது.

கோபாலக்ரிஷ்ண  பாரதியின்  நந்தனார் சரித்திரம்  சற்று வேறுபட்டு அக்கால  பண்ணையார்களின்  கொடூர குணத்தை பிரதிபலிக்கிறது.  சிறந்த சிவபக்தரான கோபாலகிருஷ்ண பாரதியார் சிதம்பரம் நடராஜன் மேல் அநேக  அற்புத கீர்த்தனைகளை எழுதியவர்.  முக்கியமான  ரொம்ப பிரபலமான  சில பாடல்களின் லிஸ்ட்  தருகிறேன்.

உத்தாரந் தாரும்,  ஐயே மெத்த கடினம்,   சற்றே விலகி இரும் பிள்ளாய்.தில்லை அம்பலத்தில் பித்தம் தெளிய மருந்தொன்று மார்கழி மாதம் திருவாதிரை நாள், ஆடிய பாதம்,  ஆடும் சிதம்பரமோ, ஆனந்த கூத்தாடினார், உனது திருவடி சரணம்,  எந்நேரமும் உந்தன்  சந்நிதி,   எப்போ வருவாரோ,   கனக சபாபதி தரிசனம் ஒருநாள்,   பிறவா வரம் தாரும்,   சிவலோக நாதனைக் கண்டு,    கைவிட மாட்டான் கனகசபேசன்,   இன்னும் வரக்  காணேனே.  வருகலாமோ,

இன்னும் எத்தனையோ பொக்கிஷங்கள். கொஞ்சம் தான் மேலே மாதிரிக்கு கொடுத்திருக்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *