ABHIMANYU – J K SIVAN

ஒரு சந்திர வம்ச இளைஞன்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN

அழியாத இதிகாச காவியம்  மஹா பாரதம். அதில் வரும் எண்ணற்ற கதா பாத்திரங்களில் மனதில் இடம் பிடிக்கும் ஒரு இளைஞன் அபிமன்யு. அநியாயம், அதர்மம், அக்கிரமம் இழைக்கப்பட்டு  பல  மஹா ரதர்களால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்ட   பல மஹாரதர்களை  ஆயுதமின்றி தனியாக எதிர்த்த  மஹா வீரன். இன்று வரை பலர் மனதில் எழும் ஒரு  கேள்வி எது?    சர்வமும் அறிந்த தெய்வாம்சம் பொருந்திய  கிருஷ்ணன்  எதற்காக அபிமன்யுவின்  உயிரை காப்பாற்ற வில்லை? இதன் பின் ஒரு  சில  ரஹஸ்யங்கள் இருக்கிறது.  மஹா பாரதத்தில்  வெளிப்படையாக தெரியாத பல ரஹஸ்யங்கள் உண்டு.

கிருஷ்ணனின்  தங்கை ஸுபத்ரா அர்ஜூனன் மனைவி.  அவள்  மகன்  அபிமன்யு. வீரத்தில்  அர்ஜுனனுக்கு சமமானவன்.
அபிமன்யு கருவில் இருக்கும் போது  ஒருநாள் கிருஷ்ணன் சுபத்திரையை பார்க்க வரும்போது  ””அண்ணா, என் வயிற்றில் ஒரு மாவீரன் வளர்கிறான் உனக்கு தெரியுமா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்  சுபத்ரை கிருஷ்ணனிடம்.
“ஆஹா, அப்படியென்றால் இனி உன் வீட்டில் ரெண்டு அர்ஜுனர்களா. பலே  பலே! அடேயப்பா, பாண்டவ குலத்துக்கு தான் எவ்வளவு பெருமை.  ஒரு அர்ஜுனன் இருக்கும்போதே பாண்டவர்களை எவரும் வெல்ல முடியாது அப்பறம் ரெண்டு அர்ஜுனர்கள் வேறு  என்றால் கேட்கவே வேண்டாம்…’ என்று சிரித்தான் கிருஷ்ணன்.அப்போது அங்கே அர்ஜுனன் வந்தான்.

“வா, அர்ஜுனா தக்க சமயத்தில் வந்தாய். நாங்கள் உன் வீர வாரிசை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று அர்ஜுனனை வரவேற்றான் கிருஷ்ணன்.
“கிருஷ்ணா, கௌரவர்களோடு யுத்தம் நிச்சயம் ஒருநாள் யுத்தம் வரத்தான் போகிறது. அதில் கௌரவ சேனையின் தூண்களான பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோர் எங்களை எதிர்த்து போரிடப் போகிறார்கள். அதற்கு முன்பு யுத்தரங்கத்தில் வெற்றி தரக்கூடிய அம்சங்களை பற்றி யோசித்தேன்.    சக்ர வியுஹம் அமைக்கும் எதிரியின் சேனை யை அழிப்பது பற்றி சிந்தித்தேன்.  ஒரு யுத்தத்தில் எதிரிப்படை சக்ர வியுஹம் அமைத்தால் அதை நாம் எந்த வியுஹம் அமைத்து எதிர் கொள்வது, எப்படி முன்னேற வழி என்பதை உன்னோடு கலந்து பேச விரும்பினேன் ” .

”அர்ஜுனா, சக்ர வியுஹத்தை உடைத்து முன்னேறுவதில்  ரொம்ப முன்னெச்சரிக்கை தேவை. யார் யார் அதன் ஒவ்வொரு முனைப்பிலும் தாக்க கூடும், எந்த இடத்தில் முதலில் தாக்கி வியூஹத்தை உடைக்க முடியும் என்று விலாவாரியாக  தீர்மானித்து அவர்களை தக்க முறையில் உபயோகிக்க வேண்டும். அவர்கள் அதற்கேற்ற சக்தி வாய்ந்த மஹா வீரர்களாக இருக்கவேண்டும்.” கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சக்ர வியூஹம்  அமைப்பு, அதை உடைத்து முன்னேறுவது  பற்றி விவரித் துக்  கொண்டி ருந்தது அத்தனையும் சுபத்ரா மட்டுமா  வெகு ஆர்வமாக கேட்டுகொண்டிருந்தாள்?அவள் வயிற்றில் இருந்து கொண்டு வீர அபிமன்யுவும் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தான்.  இதை கிருஷ்ணன் கவனிக்க தவறவில்லை.

“உனக்கு தூக்கம் வருகிறது சுபத்ரா, இது எங்கள் பாடு, பாவம், நீ ஏன் மெனக்கெடுகிறாய். உள்ளே போய் படுத்து தூங்கு” என்று சுபத்ரையை உள்ளே அனுப்பிவிட்டான் கிருஷ்ணன்.  பிறகு அர்ஜுனனும் கிருஷ்ணனும்  சக்ர வடிவ வியுஹத்தை எப்படி உடைத்து உள்ளே யிருந்து வெளிவருவது என்பது பற்றியும் விவாதித்தனர்.

மகாபாரத யுத்தத்தில் 13ம் நாள் அபிமன்யு வீராவேசமாக துரோணரின் சக்ர வியூஹத்தை தாக்கிக் கொண்டிருந் தான். அர்ஜுனன் எங்கோ ஒரு புறம் த்ரிகர்த்தர்களை துரத்திச்சென்று அவர்களோடு போர் புரிய அர்ஜுனன் மகன் அபிமன்யு குருக்ஷேத்ரத்தில் யுதிஷ்டிரருடன் சேர்ந்து கௌரவ சேனையின் சக்ர வியூஹத்தை உடைத்து உள்ளே முன்னேறி விட்டான்.
“அபிமன்யு உள்ளே செல்லாதே, அர்ஜுனன் வந்த பிறகு உள்ளே போகலாம்” என்று யுதிஷ்டிரன் சொன்னதை அபிமன்யு, காதில் போட்டுக் கொள்ளவேயில்லை .  பாவம், அந்த சிறுவன் வெளியே வர வழி தெரியாமல் மாண்டான்.

அபிமன்யு யார் என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.   கிருஷ்ணனே தெரியப்படுத்துகிறார்:
“அர்ஜுனன் மகன் அபிமன்யு சந்திரன்  மகன் வர்ஷாவின்  அம்சம். முனிவர் கர்கரால் சாபம் பெற்றவன் அவனுக்கு 16 வயதில் மரணம் என்பது முடிவான விஷயம். மஹா பாரத யுத்தத்தில் 13வது நாள்  துரோணரின் சக்ர வியுஹத்தை  உடைத்து கௌரவ சென்னைக்குள் அவன் புகுந்த அன்று  அவன் பதினாறு வயதை பூர்த்தி செய்து விட்டான். அவனை யாரும் காப்பாற்ற முடியாது. இதற்காகவே, அவன் சுபத்ரை வயதில் இருந்தபோதே அவன் சக்ர வியூஹத்தில் இருந்து வெளியேறும் வழியை கேட்டு தெரிந்து கொள்ள முடியாமல்  இருக்க சுபத்ரையை தூங்கச் செய்தேன். அவனுக்கு அர்ஜுனன் உதவியோ கிருஷ்ணன் உதவியோ கிடைக்காதவாறு அவன் தனியே விடப்பட்டான்.  இது விதி. வருவதை எதிர்கொள்ள தயங்க கூடாது”
தனது தாய் சுபத்ரையை விட திரெளபதி மீது அதிக பாசம் கொண்ட அபிமன்யு, திரொபதியின் சபதத்தை நிறை வேற்று வதற்காக தனது 16 வது வயதில், திருமணம் முடிந்த கையோடு போர்களத்திற்கு புறப்பட்டான். மகாபாரத போரின் போது எத்தனையோ வீரர்கள் இருந்தாலும், தனது அசுர வேகத்தால் கெளரவர்கள் படையை நடுங்க வைத்தான் அபிமன்யு. அர்ஜூனன் உள்ளிட்ட பலரும் எதிர்க்க தயங்கிய பீஷ்மர், கெளரவர்களின்  சேனாபதி துரோணர்,  கௌரவ ராஜா  துரியோதனன் என அனைவரையும் கதிகலங்க வைத்தான் அபிமன்யு. அத்தகைய மாவீரன், கடைசி வரை சக்கர வியூகத்தில் இருந்து வெளியே வரும் வழியை மட்டும் கற்றுக் கொள்ளவே இல்லை. அபிமன்யுவின் மரணம், அவனது பெரியப்பாவான கர்ணன் கையாலேயே நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்தும், காப்பாற்ற முடிந்தும், அதை  கிருஷ்ணன்  காப்பாற்றவில்லை.
சந்திரனின் வம்சம்  அவன் மகன் போதாவுடன் பூமியில் துவங்கியது.  அந்த வம்சத்தில் வந்த சந்தனு, சத்தியவதி என்ற மீனவ பெண்ணை காதலித்து, அவளை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். சத்யவதிக்கு பிறகு அவளுக்கு பிறந்த வாரிசுகளே  அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்வார்கள் என வாக்கு கொடுத்தால் மட்டுமே தனது பெண்ணை திருமணம் செய்து வைக்க சம்மதிப்பதாக நிபந்தனை விதித்தான் சத்யவதியின் தந்தை. சந்தனுவும் இதை ஏற்றுக் கொண்டதால் சந்தனு – சத்தியவதியின் திருமணம் நடைபெற்றது.
சந்தனுவுக்கு ஏற்கனவே திருமணமாகி  தேவ வ்ரதன்  என்ற பிஷ்மர் என்ற மகன் இருந்தான்.  சந்தனுவுக்கும், சத்யவதிக்கும் இரண்டு மகன்கள் பிறந்தனர். பீஷ்மர் இளவரசராக இருக்கும் போது, சத்தியவதியின் மகன்களை எப்படி இளவரசர் களாக  முடியும்? பட்டம் சூட்டிக்கொள்ள முடியும்?  தந்தையின் மன வேதனையை போக்க, ”நான் எந்த சூழலிலும் அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பில் உரிமை கோர மாட்டேன்” என தந்தைக்கு வாக்களித்தார் பீஷ்மர். அதுமட்டு மின்றி தனக்கு பிறக்கும் பிள்ளைகளால் அஸ்தினாபுரத்தின் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் திருமணமே செய்து கொள்ள போவதில்லை என பீஷ்மர்  பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்.
சத்யவதிக்கு பிறந்த மகன்கள் இருவரும் இளம் வயதிலேயே உயிரிழந்தனர். இதனால் அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்க ஆள் இல்லாமல் போனது. அரச குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்பதற்காக வேத வியாசர் மூலம் அம்பிகாவிற்கு திருதிராஷ்டிரரும், அம்பலிகாவிற்கு பாண்டுவும் பிறந்தனர். திருதராஷ்டிரர், அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றதால் சந்திர வம்சம் முடிவடைந்தது.  சந்திரனுக்கு கொடுத்த வாக்கின் படி அவன்  வம்சம் மீண்டும் பூமியில் நிறுவப்பட வேண்டும் என்பது கிருஷ்ணன் விருப்பம். அதற்கு சந்திரனின்   மகன் பூமியில் பிறக்க வேண்டும்.  ஆனால் அவனுக்கு  ஆயுசு 16 ஆண்டுகள் மட்டுமே. இதை  சந்திரன் ஏற்றுக்கொண்டான்.  சந்திரன்  மகன் அபிமன்யுவாக 16 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்தான்.
சக்ர வியூகத்தை அபிமன்யு முழுவதுமாக அறிந்தால் அவனை யாராலும் வீழ்த்த முடியாது. பிறகு சந்திரனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்பதால், அர்ஜூனனை முழு சக்ர  வியூகத்தையும் சொல்ல விடாமல்  கிருஷ்ணன் தடுத்ததால்  16 வயது அபிமன்யு உயிரிழப்பதையும் யாராலும்  தடுக்க முடியாமல் போனது.

அர்ஜூனனின் ஆற்றல் முழுதாக  வெளிப்பட வேண்டுமானால் அவனது அருமை மகன் அபிமன்யு இருக்கக்கூடாது. அதுவும் ஒரு காரணம்,   அபிமன்யுவின் மரணத்தை  கிருஷ்ணன் தடுக்காமல் இருந்ததற்கு.  அதுவரை பெயரளவிலேயே போரில் பங்கேற்று வந்த அர்ஜூனன், அபிமன்யு கொல்லப்பட்ட அடுத்த நாள் முதல், மகன் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதமாக கெளரவ படைகளை ஆவேசமாக தாக்க துவங்கினான். கெளரவர்கள் படை அழிந்து, போரும் முடிந்தது.,பாரத போர் முடிவுக்கு  முக்கிய காரணம் அபிமன்யுவின் உயிர்த்  தியாகம் முக்யமான  திருப்புமுனை.
அபிமன்யுவின் இறுதி நாளில் அவன்  மனைவி உத்திரா கருவுற்றிருந்தாள். பாரத யுத்தத்தின் 18 வது நாளில் மற்ற பாண்டவர்களின் வாரிசுகள் அனைவரும் கொல்லப்பட்டனர். அபிமன்யு இறந்த பிறகு, அவருக்கு பிறந்த மகன் தான் பரிக்ஷித்.  பாண்டவர்கள் அரசாட்சி துவங்கியது.  பாண்டவர்கள் காலம் முடிந்ததும் பரிஷித், அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றான். சந்திர வம்சம் மீண்டும் பூமியில் உதயமானது. சந்திரவம்சம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்பதற்காகவே, தனது அருமை மருமகனான அபிமன்யுவின் மரணத்தை பற்றி அறிந்தும் கிருஷ்ணரால் தடுக்க முடியாமல் போனது. அதே சமயம்  அவன் மகன் உயிரைக் காப்பாற்றி பரீக்ஷித் ராஜாவானான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *