ANDAVAN PICHI – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN

”ஆண்டவன் பிச்சி”

இந்த பெயர் தெரியுமா? தெரியாதா? பரவாயில்லை. T .M .சௌந்தரராஜன் என்பவரையாவது தெரியுமா? கண்டிப்பாக தெரியுமே. அவரைப் பார்த்திராவிட்டாலும் அவர் குரலை கேட்காத ஒரு தமிழன் வீடும் கிடையாதே. அவர் சினிமா பாட்டுகள் பாடியது இருக்கட்டும். தெய்வீக பாடல்கள் சில அற்புதமாக பாடியதை கேட்டிருப்பீர்களே . அதுவும் இந்த பாட்டை கேட்டு உருகாதார் யாராவது உண்டா?

உள்ளம் உருகுதய்யா – முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே – எனக்குள்
ஆசை பெருகுதப்பா
பாடிப் பரவசமாய் – உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி – முருகா
ஓடி வருவாயப்பா
பாசம் அகன்றதய்யா – பந்த
பாசம் அகன்றதய்யா – உந்தன்மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே – எந்தன்
ஈனம் மறைந்ததப்பா
ஆறுத் திருமுகமும் – உன் அருளை
வாரி வழங்குதய்யா
வீரமிகுந்தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா
கண்கண்ட தெய்வமய்யா – நீ இந்தக்
கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல் – எனக்குன்
பதமலர் தருவாயப்பா

இந்த பாட்டின் பின்னணி ஒரு ஆச்சர்யமான விஷயம். TMS ஒரு முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழனி முருகனைக் காணச் செல்பவர். ஒருமுறை வழக்கமாக தங்கும் லாட்ஜில் இருந்தபோது அங்கே வேலை செய்த பையன் ஒருவன் , ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதய்யா”. அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். ! அதில் இன்னொரு ஆச்சர்யம் அந்த முருகன் பாடலைப் பாடிய சிறுவன் – ஒரு முஸ்லிம் பையன். டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார்.

“தம்பி..இங்கே வாப்பா..நீ பாடிக்கிட்டிருக்கியே அந்த பாட்டை எழுதினது யாரு தெரியுமா?
”தெரியாதுங்களே. நல்லா இருந்துச்சு அதனாலே பாடினேன் ”
“பரவாயில்லை.முழு பாட்டும் இன்னொருதரம் பாடு.”
பையன் பாட, ஒவ்வொரு வரியாக அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.

பழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதய்யா” பாடலை பாடி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ். அதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும் பொழுது , மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..!

எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என தெரிந்துகொள்ள ஆவல் அவருக்கு. எங்கும் எந்த ஊரிலும் யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.

அப்பறம் பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் சென்னை, தம்புச் செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்ற டி.எம்.எஸ். கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் … அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் . ஏன்? அங்கே சுவற்றில் ஓரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் : “உள்ளம் உருகுதடா…” – இயற்றியவர் பெயர் அடியில் .’‘ஆண்டவன் பிச்சி’’ !

‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண். மைலாப்பூரில் செப்டம்பர் 6, 1899ல் பிறந்த போது பெயர் மரகதவல்லி. மூன்று வயதிலேயே , அம்மா இறந்தபிறகு மாமா வேங்கடசுப்பையரிடம் வளர்ந்தவர். பெண்கள் பள்ளிக்கூடம் சென்று படிக்கும் வழக்கம் இல்லாத காலம். அவள் தாத்தா சமஸ்க்ரிதம், ஆங்கிலம், தமிழ், அறிஞர். அப்பாவும் அப்படியே. வசதியான வக்கீல் குடும்பம். ஒன்பது வயதில் கல்யாணம். பாட்டி முருக பக்தை. முருகன் பற்றிய உணர்வை ஊட்டினவள் இந்த பாட்டி. மரகதத்தின் நெஞ்சில் முருகன் குடியேறி னான்.
மரகதம் ஒன்பது குழந்தைகள் பெற்றாள். வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.. முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர். இறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.
காஞ்சி மஹா பெரியவா ஒரு நாள் அவள் வீட்டிற்கு சென்ற சம்பவம் விசேஷமானது.
எல்லோரும் பெரியவாளுக்கு தக்க மரியாதை செய்து வரவேற்றனர். அவர் ஏற்கவில்லை. பெரியவா சுற்றி முற்றிலும் பார்த்து விட்டு.
”உள்ளே பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கிறாளே அவளை வரச்சொல் ” என்கிறார். எல்லோரும் அதிசயித்தனர்.உள்ளே இருந்து வந்த மரகதம் பயபக்தியோடு பெரியவாளை வணங்கி ஓரமாக நின்றாள்.

” இவள் சாதாரண பொண்ணு இல்லை. தெய்வீகமானவள்”
அவளை அருகே அழைத்து பிரசாதம் கொடுத்துவிட்டு எல்லோரையும் பார்த்து விட்டு அவளிடம் என்ன சொன்னார்?
”இனிமே உன் பெயர் ஆண்டவன் பிச்சி’ ”
மஹா பெரியவா ஆசீர்வதம் பெற்றது முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’..’ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.

ஆண்டவன் பிச்சி தெலுங்கு, தமிழ் சமஸ்க்ரிதம் ஆகிய மொழிகளிலே நிறைய எழுதியிருக்கிறார். முருகன் அவளுக்கு எதிரே தோன்றி ”இந்தா, இதை இப்படி எழுது” என்று ஊக்குவித்தானா? அவள் அம்பாள் உபாசகி. ஆகவே சௌந்தர்ய லஹரியை தமிழில் பாடலாக எழுதி இருக்கிறார். முருகனை ”அடே ஆண்டிப் பண்டாரம்” என்று தான் செல்லமாக அழைப்பார்.

”உள்ளம் உருகுதய்யா” பாட்டு எப்படி TMS இடம் சென்றது?. எப்படி ஒரு முஸ்லீம் பையனை இந்த பாட்டு கவர்ந்தது? எப்படி பழனியில் அந்த முஸ்லீம் பையனை லாட்ஜில் வேலை செய்ய வைத்தது? எப்படி TMS அதே லாட்ஜ் வர நேர்ந்தது? எப்படி அவர் காது கேட்க அந்த பையன் இதை பாடினான்? எப்படி அவர் எதை எழுதி வைத்து ஏன் பாடி பிரபலப்படுத்தினார்? TMS ஐ எப்படி காளிகாம்பாள் கோவில் செல்ல வைத்தது/? ஆண்டவன் பிச்சி பெயர் எப்படி அங்கே தெரிந்தது.?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை ஒரே ஒரு வார்த்தை. ”முருகனின் சித்தம்”. ஒன்று மட்டும் நிச்சயம். ஆண்டவன் பிச்சி அஸாதாரணமான ஒரு அருணகிரி. அவளை பற்றி ;நிறைய எழுத விஷயம் இருக்கிறது. பின்னர் ஒருமுறை அதை நிறைவேற்ற ”எனக்குள் ஆசை பெருகுதப்பா”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *